2012-08-15 15:57:25

அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் உழைப்பாளர் நாளையொட்டி, ஆயர்களின் செய்தி


ஆக.15,2012. வேலையின்றி, அல்லது போதுமான ஊதியம் இன்றி இலட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் தங்கள் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் ஓர் அதிகாரி கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் திங்களன்று அமெரிக்காவில் உழைப்பாளர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு செப்டம்பர் 3ம் தேதி நிகழவிருக்கும் இந்த நாளையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி, மனித முன்னேற்றம் என்ற பணிக்குழுவின் தலைவரான ஆயர் Stephen Blaire அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.
இன்றைய நிலவரப்படி, 1 கோடியே, 20 இலட்சம் அமெரிக்கர்கள் வேலையின்றி இருப்பதாகவும், இன்னும் பல இலட்சம் அமெரிக்கர்கள் தகுந்த வேலையோ, வேலைக்கேற்ற ஊதியமோ பெறாமல் இருப்பதாகவும் கூறிய ஆயர் Blaire, இந்நிலையால் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய மதிப்பைத் தகர்க்கும் ஒரு வழி, வறுமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளதை மேற்கோளாகக் கூறிய ஆயர் Blaire, இந்த அவல நிலையில் வாழும் 4 கோடியே 60 இலட்சம் அமெரிக்கர்களுக்கு உழைப்பாளர் நாளன்று சிறப்பாக வேண்டுதல்களை எழுப்புமாறு தன் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.