2012-08-14 16:24:44

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 132, பகுதி 2


RealAudioMP3 திரைப்படங்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் Oscar விருதுகளைப்பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். Oscar Pistorius என்ற இளைஞரைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இளைஞரைப்பற்றித் தெரிந்துகொள்வது நம் எண்ணங்களை உயர்வடையச் செய்யும். ஆகஸ்ட் 12 இஞ்ஞாயிறன்று இலண்டன் மாநகரில் 30வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவுற்றன. இன்னும் இருவாரங்களில், ஆகஸ்ட் 29ம் தேதி, இலண்டனில் மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாக உள்ளன....
முழுமையான உடல் திறன் கொண்டவர்களுக்கு நடத்தப்படும் விளையாட்டுக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் விளையாட்டுக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பவர் Oscar Pistorius. இவரைப்பற்றி இன்றைய விவிலியத் தேடலில் நாம் பேசுவதற்குக் காரணம் உள்ளது.
இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 132ல் தாவீது இறைவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், இறைவன் தாவீதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் சிந்திக்க இருக்கிறோம். இத்திருப்பாடலை ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சிந்திக்க வந்திருப்பதை இறைவன் நமக்குத் தந்துள்ள ஒரு வாய்ப்பாக, ஓர் அழைப்பாக நான் கருதுகிறேன். அன்னை மரியாவின் விண்ணேற்பு, இந்தியத் தாயின் விடுதலை என்ற இரு திருநாட்களும் நமக்குச் சொல்லித்தரும் பாடங்கள் உடன்படிக்கை, அர்ப்பணம் என்ற மேலான எண்ணங்கள்.

வாழ்நாள் முழுவதும் ஒருவரை அர்ப்பணத்துடன் வாழவைக்கும் ஓர் உறுதியான நிலைப்பாடே உடன்படிக்கை. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து Oscar Pistorius வாழ்வை நாம் திருப்பிப்பார்த்தால், அங்கு காணப்பட்ட அர்ப்பணம், உடன்படிக்கை இவற்றை உணர்ந்துகொள்ளலாம்.
"கால்கள் இன்றி மிக வேகமாக ஓடக்கூடிய மனிதர்" என்ற பட்டத்தையும், உலகப் புகழையும் பெற்ற இந்த வீரர் 1986ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் பிறந்தார். பிறப்பிலேயே கால்களில் சரியான வளர்ச்சி இல்லாததால், இக்குழந்தைக்கு 11 மாதங்கள் நிறைவடைந்தபோது, இரு கால்களையும் முழங்கால் முட்டுக்குக் கீழ் வெட்டி எடுத்துவிட்டனர். செயற்கைக் கால்களுடன் வாழ ஆரம்பித்தார் Oscar. 18 வயதானபோது, செயற்கைக் கால்களின் உதவியுடன் இவர் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளத் துவங்கினார். கடந்த ஏழு ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பந்தயங்களில் உலக அளவிலும், ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் பரிசுகளைக் குவித்துள்ளார்.
முழு உடல் திறன் கொண்டவர்களுடன் தானும் ஓடவேண்டும் என்று ஒலிம்பிக் நிர்வாகத்தினருக்கு இவர் விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. எனவே, இவர் உலக விளையாட்டுக்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள நீதி மன்றத்தில் முறையிட்டார். வழக்கின் முடிவில் Oscar Pistorius முழு உடல் திறன் கொண்ட மற்றவர்களோடு போட்டியிடலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இயற்கைக் கால்கள் கொண்டு ஒடுபவர்களுடன் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட ஒருவர் போட்டியிடுவதற்கு பலரும் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இவை எதுவும் Oscarஐ அசைக்கவில்லை. அவர் உலகிற்கு ஓர் உண்மையை எடுத்துச்சொல்ல முயன்றார். அந்த உண்மையைச் சொல்ல ஒலிம்பிக் விளையாட்டுக்களைவிட சிறந்ததோர் அரங்கம் தனக்குக் கிடைக்காது என்பதை Oscar உணர்ந்தார். எனவேதான், பல தடைகளையும் தாண்டி, இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொண்டார். 400 மீட்டர் அரை இறுதிப் போட்டிவரை வென்றவர், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை. இருந்தாலும், அவரை அன்று ஒலிம்பிக் அரங்கமே எழுந்து நின்று கைதட்டி கவுரவித்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இவரது முயற்சி தனித்துவம் மிகுந்த ஒரு சாதனை என்று பேசப்படுகிறது.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகளவில் கோடான கோடி மக்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் Oscar Pistorius முழு உடல்திறன் கொண்ட மற்ற வீரர்களோடு பங்கேற்றதை எண்ணும்போது, இதை அவர் ஒரு கொள்கைபரப்பும் பணியாகச் செய்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது. நற்செய்தியைப் பறைசாற்றுகிறேன் என்று சொல்லாமல், இவர் அப்பணியைச் செய்துவருகிறார். இவர் பறைசாற்றும் நற்செய்தி என்ன என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்.
மாற்றுத் திறன்கொண்டவர்கள் முழு உடல்திறன் கொண்ட மற்றவர்களைப்போலவே வாழமுடியும், அவர்களைப்போலவே எதையும் சாதிக்கமுடியும் என்ற கனவை வளர்ப்பதே இவர் பறைசாற்றும் நற்செய்தி. முக்கியமாக, பிறவியிலேயே கால்களை இழந்துள்ள பல குழந்தைகளுக்கு Oscarன் ஒலிம்பிக் ஓட்டம் புதியதோர் உத்வேகத்தைத் தந்திருக்கும். அண்மையில் வெளியான ஒரு புகைப்படம் இந்த எண்ணத்தை நம் மனங்களில் ஆழமாய்ப் பதிக்கிறது. செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட ஒரு குழந்தையுடன் Oscar Pistorius சிரித்தபடியே நடந்துசெல்வது அப்புகைப்படத்தில் பதிவாகியிருந்தது. ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்ற கூற்றுக்கு இந்தப் புகைப்படம் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

நாம் இதுவரை பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் எல்லாமே Oscar Pistoriusன் வெளிப்புற வாழ்க்கை. ஊடகங்களில் வெளியான Oscarன் சாதனை நாட்களையெல்லாம் சேர்த்து கணக்கிட்டால், 100 நாட்களுக்குள் அந்தச் சாதனை வரலாறு அடங்கிவிடும்.. ஆனால், Oscarக்கு இப்போது வயது 26 ஆண்டுகள். இந்த 100 நாள் சாதனை வரலாற்றுக்குப் பின்னணியில் 9400 நாட்கள் இரவும், பகலும் அவர் எத்தனை சவால்களை, தடைகளை, துயரங்களைக் கடந்து வந்திருக்கவேண்டும்??? அவர் மட்டுமல்ல, அவரது குடும்பம் முழுவதும் Oscarன் இந்தப் பயணத்தில் சவால்களைச் சந்தித்திருப்பர். இவர்கள் சந்தித்தச் சவால்கள், அடைந்த இன்னல்கள் ஆகியவற்றைச் சிந்திக்க திருப்பாடல் 132 நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.
"ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும்." என்று இத்திருப்பாடல் ஆரம்பமாகிறது. அதேபோல், "ஆண்டவரே, Oscarஐயும், அவரைப்போல் வாழ்வில் அர்ப்பணச் சிந்தையுடன் வாழும் பல்லாயிரம் மனிதர்களையும் அவர்கள் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும்." என்று சொல்லத் தோன்றுகிறது.
கால்களை இழந்தாலும், தன் கனவை, வாழ்வின் இலட்சியங்களை இழக்காமல் Oscar Pistorius மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்திற்குப் பெயர் அர்ப்பணம். இவர் வாழ்க்கையோடு செய்துகொண்ட ஓர் உடன்படிக்கையே இவருக்குள்ளும், இவருடைய குடும்பத்திற்குள்ளும் இந்த அர்ப்பண உணர்வை உருவாக்கியது. Oscarஐப் போன்று இலட்சியங்களோடு வாழும் மனிதர்கள் பல்லாயிரம் பேரை நாம் அறிவோம். இவர்கள் அனைவருமே தங்கள் கனவுகளை அடைய வாழ்வோடு உடன்படிக்கை செய்தவர்கள்.

இத்திருப்பாடலின் 2வது இறைசொற்றோடரிலும், 11வது இறைசொற்றோடரிலும் ஒரே விதமான எண்ணம் வெளியாகிறது. "தாவீது ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறினார்" என்று 2ம் வரியிலும், "ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்" என்று 11ம் வரியிலும் கூறப்பட்டுள்ளது. தாவீதும், ஆண்டவரும் ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கூறியதையே நாம் உடன்படிக்கை என்கிறோம்.

உடன்படிக்கை, ஒப்பந்தம் என்ற இருவார்த்தைகளும் ஒரே எண்ணத்தை வெளிப்படுத்துவதுபோல் தெரியலாம். ஆயினும் இவை இரண்டுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உள்ளன. இன்றைய உலகில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது ஒப்பந்தம் - Contract. பொதுவாக ஒப்பந்தங்கள் பணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உறவு. ஒப்பந்தத்தில் இருவர் ஈடுபடும்போது, இருவருக்கும் முதலில் மனதில் தோன்றும் கேள்வி என்ன? இந்த ஒப்பந்தத்தால் எனக்கு என்ன இலாபம்? அடிப்படையில் ஒப்பந்தம் என்பது என் சுயத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு கருவி. இந்தக் கருவி சரியில்லை என்றால், இதனை விலக்கிவிட்டு, அலல்து விற்றுவிட்டு, பயன்தரும் மற்றொரு கருவியை நான் வாங்கிக்கொள்ள முடியும். ஒப்பந்தங்கள் நிரந்தரமற்றவை.

பணியிடங்களில், வர்த்தகங்களில் அதிகமாய் பயன்படுத்தப்படும் ஒப்பந்தம் என்ற எண்ணம் தற்போது நடைமுறை வாழ்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றையச் சூழலில் திருமண உறவுகளும் ஒப்பந்தகளாக மாறிவரும் ஆபத்தை நம்மால் காணமுடிகிறது. எனவேதான் சிறு, சிறு குறைகள், அதிருப்தி இந்த உறவை முறித்து விடுகின்றன.
இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறைவை திருமண உறவுக்கு ஒப்புமைப்படுத்தி விவிலியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவு உண்மையிலேயே ஓர் உடன்படிக்கை. உடன்படிக்கையில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த இலாபம் என்ன என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு, ஒருவர் ஒருவருக்காக எவ்விதம் வாழ்வது என்ற கேள்வியை முதன்மைப்படுத்துவர். இந்த உறவில் பாதிக்குப் பாதி 50-50 என்ற எண்ணங்கள் இருக்காது. உடன்படிக்கையை எளிதில் உடைக்கவும் முடியாது.
இப்படி ஓர் உறவையே நாம் 132வது திருப்பாடலில் காண்கிறோம். தாவீதுக்கும் இறைவனுக்கும் இடையே உருவான இந்த உடன்படிக்கையில், "இறைவனுக்கு ஓர் இல்லத்தை எழுப்பாமல், நான் என் இல்லத்தில் உறங்கமாட்டேன்" என்று தாவீது ஆணையிடுகிறார். இந்த ஆணையை அவரால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. எருசலேம் ஆலயத்தை எழுப்பும் பேரருள் தாவீதின் மகன் சாலமோனுக்குக் கொடுக்கப்படுகிறது.
தாவீது உடன்படிக்கையில் தன் பங்கைச் சரிவர செய்யவில்லை என்பதற்காக இறைவன் தன் வாக்குகளிலிருந்து சிறிதும் பிறழவில்லை. இதுதான் உண்மையான உடன்படிக்கை. எனக்கு வந்து சேர வேண்டியவை வரவில்லை எனவே, நானும் ஒன்றும் செய்யப்போவதில்லை என்று வாழ்வது உடன்படிக்கை வாழ்வு அல்ல. இறைவன் ஆணையிட்டுச் சொல்லும் அழகு வார்த்தைகளுடன் இன்றைய நம் தேடலை நாம் நிறைவு செய்வோம். தான் வாழ விரும்பும் ஓர் இடமாக இறைவன் சீயோனைத் தேர்ந்தபின், அவர் கூறும் வார்த்தைகள் இவை. இன்று விடுதலை நாளைக் கொண்டாடும் இந்தியாவுக்கு இந்த வார்த்தைகளை இறைவன் சொல்வதாக கற்பனை செய்வோம். இதே ஆசீரை இந்திய மக்களுக்கு, உலக மக்களுக்கு இறைவன் பொழிய வேண்டும் என்று மன்றாடி இந்த ஆசீர் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்:
திருப்பாடல் 132: 14-16
"இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்; அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன். இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்; இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.








All the contents on this site are copyrighted ©.