2012-08-13 16:08:17

வாரம் ஓர் அலசல் - உன்னால் முடியாதது எதுவும் உள்ளதா? (அனைத்துலக இளையோர் தினம் ஆகஸ்ட் 12)


ஆகஸ்ட் 13,2012. கிருஷ்ணகிரி மாவட்டம், கிங்ஸ் சித்தா ஆசிரமத்தில், அன்று ஒருநாள் ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கவலையோடு உட்கார்ந்திருந்தார். அவரோடு இளைஞர் ஒருவரும் உட்கார்ந்திருந்தார். இவர்கள் இருவரும் வேலூர் அருகே அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரியவர், மருத்துவர் எஸ்.சந்துருவைப் பார்த்தவுடன் எழுந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு அழுதார். “ஐயா, நீங்கதான் என்னையும் எனது மனைவியையும் காப்பாற்றணும். எங்களுக்கு ஒரே மகன். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் வருமானம் ஒன்றுதான் எங்களுக்கு ஆதரவு. அவன்தான் எங்களைக் காப்பாற்றுகிறான்” என்று சொன்னார். “பின்னர் என்ன கவலை உங்களுக்கு! ஒரே பையன். செலவு குறைவு. நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்கள். அவனுக்கும் நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வையுங்கள். உங்கள் கவலையெல்லாம் குறைந்து விடும்” என்று மருத்துவர் பதிலுக்குச் சொன்னார். அதற்கு அந்தப் பெரியவர், “அதுதான் எங்களால் முடியாது. எங்கள் மகன் பயங்கரக் குடிகாரன். யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். காலையில் நல்லவன். மாலையில் பொல்லாதவன். மாலையில் அவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது தெரிந்தால் நாங்கள் வீட்டைவிட்டே ஓடிவிடுவோம். ஏதாவது ஒரு வீட்டில் இருந்துவிட்டு அவன் தூங்கிய பிறகு, இரவு 11, 12 மணிக்கு மேல் சத்தம் போடாமல் வீட்டிற்கு வந்து தூங்குவோம். தினமும் இப்படித்தான். சிலநாள்களில் அவன் மிதமிஞ்சிய போதையில் வந்தால் அவனை வீட்டில் உள்ளே விட்டு அடைத்துவிட்டு வெளியில் பூட்டுப் போட்டு விடுவோம். எல்லாரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்பொழுது அவன் திடீரென வீட்டுக் கூரைமீது ஏறி நின்றுகொண்டு ஓடுகளைத் தூக்கி எறிவான். ஊர்மக்கள் பயந்து ஓடுவார்கள். ஐயா, அவன் திருந்த வேண்டும்” என்று கண்ணீரோடு கேட்டுக் கொண்டார். அந்த மருத்துவர் கொடுத்த மூலிகை மருந்தால் அந்த மகன் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்துவிட்டதாக ஒரு செய்தியில் வாசித்தோம்.

அன்பு நேயர்களே, குடி குடியைக் கெடுக்கும் என்று எத்தனை இடங்களில் எழுதி வைத்தாலும் “குடி”மகன்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டேதான் போகிறது. இவ்வெண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடி என்று கடந்த ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழ் இதழ்களில் வெளிவந்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தினசரி நிகழ்ச்சியில் கணவர்களின் குடிப்பழக்கம் குடும்பங்களை எவ்வளவு தூரம் துயரத்தில் ஆழ்த்துகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. குடிபோதையில் தினமும் வீட்டில் அடி உதை, சந்தேகம். ஒரு கணவர் சந்தேகத்தில், தனது காதல் மனைவியின் தலைமுடியைக்கூட வெட்டி மொட்டையடித்து விட்டிருக்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், மதுவுக்கு அடிமையாகிறவர்கள், தங்களது மனைவி அல்லது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். சென்னையிலுள்ள 40 குடிசைப் பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்பில், 99.4 விழுக்காட்டுப் பெண்கள் தங்கள் கணவரின் வன்முறைக்கு ஆளாகின்றனர் எனவும், 74.9 விழுக்காட்டுப் பெண்கள் தங்களது விருப்பமில்லாமல் கணவர்களின் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுகின்றனர் எனவும், இவ்வாறு நடப்பதற்கு முதன்மைக் காரணம் குடிப்பழக்கம் எனவும் தெரிய வந்துள்ளது.

தமிழக எய்ட்ஸ் நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் குடிப்பழக்கம் உடையவர்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மதுவுக்கு அறிமுகமாகும் வயது 25 ஆக இருந்தது. ஆனால் இன்று அது 13 ஆகக் குறைந்திருக்கிறது. 13வது வயதில் குடிக்கத் தொடங்குவோரில் பத்துக்கு நான்கு பேர் 25 வயதைஎட்டு முன்னரே இறந்து விடுவார்கள் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 12 வயதுப் பையன் ஒருவன் பீர் பாட்டிலை இடுப்பில் சொருகிக் கொண்டு சைக்கிளிலில் போயிருக்கிறான். அப்போது அந்த பாட்டில் வெடித்து, பையன் வயிறு கிழிந்து இறந்துள்ளான். இதுபோன்ற திடுக்கிட வைக்கும் இன்னும் பல ஆய்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் குக்கிராமங்கள் உட்பட எல்லா இடங்களிலும் 6,172 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. 2003-04ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்த ஆண்டு வருமானம் 3,500 கோடி ரூபாய். இது 2011-12ம் ஆண்டில் அதாவது தற்போது 18 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தத் தொகை வெறும் இலாபம் மட்டுமே. தமிழ்ச் சமுதாயம் ஆண்டுதோறும் நாற்பதாயிரம் கோடி ரூபாயைக் குடியில் கொட்டுகிறது. இந்தியாவில் மதுஅருந்தும் பழக்கம் உடையவர்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்தக் குடிமகன்கள் ஏன் இதற்கு அடிமையாகிறார்கள் என்றால் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவும், மனநிலையை மாற்றிக் கொள்ளவும், பொழுது போக்குக்காகவும், அடித்தட்டுப் பெண்கள் உடல்வலியை மறக்கவும் ... இப்படிக் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. குடிப்பதனால் ஏற்படும் பாதிப்பை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மூளை, கல்லீரல், தண்டுவடம், நரம்புகள் போன்ற உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அத்தோடு, கை கால்கள் செயலிழக்கின்றன. மூளை மந்தமடைகிறது. மறதி, கோபம், பகைமையுணர்வு, தாழ்வுமனப்பான்மை, வாழ்வில் நிலையற்றதன்மை போன்ற மனநலப் பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. குடும்பங்களில் உறவுகள் சிதைவடைகின்றன. பிள்ளைகள் குடிகாரத் தந்தையருக்குப் பயப்படுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் குடும்பங்கள் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றன. கணவர்களின் குடிப்பழக்கத்தால் தாய்மார் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதில் என்ன நம்மைப் பதட்டப்பட வைக்கின்றதென்றால் இந்தக் குடிப்பழக்கம் 13 வயதிலே தொடங்குவதுதான். அத்துடன் பெண்களும் குடிக்க ஆரம்பித்திருப்பதுதான். இந்தப் பழக்கத்தில் சீரழிந்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு வாழ்வோருக்கு அரசு சார்பில் எத்தனை மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன என்பதை நேயர்களே உங்களால் சொல்ல முடியுமா?. அரசு சாரா அமைப்புகள் வைத்திருப்பது எமக்குத் தெரியும்.

கடந்த ஜூலையில் கோவையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு குறித்த கருத்தரங்கில் பேசிய காவல்துறை துணை கமிஷனர் ஹேமா கருணாகரன், இளைஞர்களில் 15, 16 வயதுள்ளவர்களில் 30 விழுக்காட்டினர், போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். அதனால் அவர்களின் குடும்பமும் சீரழிகிறது என்பதை உணராமல் உள்ளனர், அண்மைக் காலமாக பள்ளி மாணவர்கள், குடிப்பழக்கத்தில் மூழ்கி வருகின்றனர். ஸ்டேசனரி பொருளான ஒயிட்னரை நுகர்ந்து போதை ஏற்றிக்கொள்கின்றனர். இந்தியா இளைஞர்கள் கையில்... ஆனால் இளைஞர்களோ போதையின் பிடியில் உள்ளனர் என்பது வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார். FACEBOOKல் 30 விழுக்காட்டினரும், கைபேசியால் 40 விழுக்காட்டினரும், பேஸ்புக் வசதி கொண்ட கைபேசியால் கிடைக்கும் பேஸ்புக் காதலிகளால் 80 விழுக்காட்டு இளைஞரும், அதே வசதி கொண்ட காதலர்களால் 90 விழுக்காட்டுப் இளைஞிகளும் சீரழிக்கப்படுகின்றனர் என்று மற்றுமொரு புள்ளி விபரம் கூறுகிறது.

ஆனால் இளையோர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள டாக்டர் அப்துல்காலம், இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அண்மையில் புதுச்சேரியில் பேசியிருக்கிறார். மதுரையின் முன்னாள் ஆட்சியாளர் சகாயம் அண்மையில் மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசிய போது,

இங்கிலாந்தில் இரும்பும் ஜெர்மனியில் நிலக்கரியும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ஆப்பிளும், தென் ஆப்பிரிக்காவில் தங்கம் மற்றும் வைரம் கிடைக்கிறது என்று எனக்கு தெரியும். உலக நாடுகளில் எந்தெந்த பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியும். ஆனால் இந்தியாவில் எங்கே வேலை கிடைக்கிறது என்று மட்டும் எனக்குத் தெரியாது என்று இளங்கலை படித்து முடித்த இளைஞர் ஒருவர் விரக்தியோடு கூறினார். இவரைப் போல மற்றோர் இளைஞர், உலகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் இடிக்க சொல்லுங்கள். குறைந்தபட்சம் அந்த அலுவலகங்களை இடிக்கின்ற வேலையாவது எனக்கு கிட்டட்டும் என மனவேதனையோடு குறிப்பிடுகிறார். இந்த நிலை மாற வேண்டுமானால் இளையோர்க்கு ஏற்படும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கடுமையாக உழைப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும், மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது. எதிர்காலத்தை சந்திக்க கூடிய மனவலிமை உடையவர்களாகத் திகழ வேண்டும், சாதனையாளர்களாக மாற வேண்டும்

எனக் கேட்டுக் கொண்டார். இன்னோர் அரசியல்வாதி ஒருவர்

“ஒரு நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து தங்கமோ வைரமோ அல்ல. அந்த நாட்டின் இளைஞர்களே என்பதே எனது நம்பிக்கை. உலகில் முன்னேற்றமடைந்துள்ள அனைத்து நாடுகளும் அந்த நாட்டின் இளைஞர் சக்தியால்தான் முன்னேற்றம் கண்டுள்ளன. இளைஞர்களின் சக்தியும் துணிச்சலுமே அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இளைஞர்களின் பலம் அதிகரிக்கும் போது நாட்டின் முன்னேற்றமும் வேகமடைகிறது”

என்று சொல்லியிருக்கிறார். வளர்இளம் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 முதல் 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனச் சொல்லப்படுகிறது. இந்த இளையோர் சமுதாயங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வை உயர்த்தும் நோக்கத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி அனைத்துலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. 2000மாம் ஆண்டில் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட முதல் அனைத்துலக இளையோர் தினம் கொண்டாடப்பட்டது. இஞ்ஞாயிறன்று இலண்டன் ஒலிம்பிக்ஸ் நடந்து முடிந்துள்ளது. இதில் 100 மீட்டர் நீச்சல் போட்டியின் பிரெஸ்ட்ஸ்டோர்க் (breaststroke) பிரிவில் 15 வயது Ruta Meilutyte என்ற லித்துவேனியச் சிறுமி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இப்படி எத்தனையோ இளையோர் வியக்கத்தக்கச் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

எனவே சோர்ந்து நிற்கும் அன்பு இளைய சமுதாயமே, உங்களையொத்த வயதுடையவர்கள் போல உங்களாலும் சாதனைகள் படைக்க முடியும். உங்களிடம் அசாதாரணத் திறமைகள் உள்ளன. வாய்ப்புக்களுக்காகக் காத்திராமல் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். மதுவிலும் போதைப்பொருளிலும் பேஸ்புக், அலைபேசி போன்றவைகளிலும் இளம்பருவத்தைத் தொலைத்து விடாதீர்கள். பிரவாகமாக ஓடும் கங்கையும் ஒரு சிறிய ஓடையில் தான் துவங்குகிறது. எந்த ஒரு பெரிய மழையும், ஒரு தூறலில் தான் துவங்குகிறது. கவிஞர் யாழ்நிலவன் கவிதை வடித்திருப்பது போல, இளைஞனே, உன்னால் முடியும்.

முடிந்ததை நினைத்து வருந்தி வருந்தி முடங்கி வாழாதே
நடக்கப்போவதை சிந்தித்து நாளைய சரித்திரத்தை நீ மாற்று
உன்னில் நீ நம்பிக்கை வைத்தால் உனக்கென உலகிலே
ஒரு வரலாறு அமையும்
உன்னதமான நண்பர்களை நீ சம்பாதித்தால்
உலகமே உன் கை நுனியில் கிடைக்கும் வாழ்ந்து பார் நண்பா வாழ்க்கை இனிமையானது.







All the contents on this site are copyrighted ©.