2012-08-11 16:36:40

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் இளைஞர்களில் மாற்றத்தை உருவாக்கும்


ஆக.11,2012. லெபனன் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்கும், பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புரவுக்கும் லெபனின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து குரல்கொடுத்து வரும் இவ்வேளையில், திருத்தந்தையின் திருப்பயணம் அந்நாட்டில் இடம்பெற உள்ளது முக்கியத்துவம் நிறைந்த ஒன்று என்றார் அந்நாட்டு திருச்சபை அதிகாரி ஒருவர்.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள “Redemptoris Mater” குருத்துவப் பயிற்சி இல்லத் தலைவர் குரு Guillaume Bruté de Rémur, திருத்தந்தையின் செப்டம்பர் மாதத் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்முகத்தில், மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மன்றப் பரிந்துரைகள் அடங்கிய சிறப்பு ஏட்டை வெளியிட திருத்தந்தை லெபனன் வரும்போது, பெரும் எண்ணிக்கையில் விசுவாசிகள் எகிப்திலிருந்தும் ஈராக்கிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ சபைகள் மட்டுமல்ல, கத்தோலிக்கத் திருசபைக்குள்ளேயே இருக்கும் மெல்கியத், மாரோனைட் மற்றும் காப்டிக் ரீதி சபைகளும் ஒன்றிணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் குரு. Bruté de Rémur.
ஏனையத் திருப்பயணங்களுக்குப்பின் இடம்பெறுவதுபோல் லெபனனிலும் திருத்தந்தையின் இப்பயணம், இளைஞர்களிடையே உற்சாகத்தை வழங்கி, தேவ அழைத்தல்கள் பெருக உதவும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார் பெய்ரூட்டின் “Redemptoris Mater” குருத்துவப் பயிற்சி இல்லத் தலைவர்.








All the contents on this site are copyrighted ©.