2012-08-11 16:55:53

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்குப் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்


ஆக.11,2012. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களைத் தேட ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பக்கச்சார்பற்ற விசாரணையே சிறந்த தீர்வாகும் என்று Amnesty International எனப்படும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான அதிகாரி அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசைப் பொறுத்தவரையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை அது கொண்டுள்ளது என உரைத்த அவர், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் வழியாக பல உறுதிமொழிகளை வழங்கியுள்ள இலங்கை அரசு, கடந்த ஜூலையில் வெளியிட்ட குழுவின் இறுதி அறிக்கையிலும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தமிழக மக்கள், இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் விதிமுறைப்படி இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்ந்தோர் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் அனந்த பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.