2012-08-10 15:25:08

சிட்னி நகரில் ஆரம்பமாகியுள்ள "அறிவியுங்கள் 2012" கருத்தரங்கில் பேராயர் Rino Fisichella


ஆக.10,2012. கடவுளின் குரலை அடக்கிவிடுவதால் மனித சமுதாயம் சுயமாகத் தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரம் பெற்றுவிடும் என்று எண்ணுவது தவறான முடிவு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 9 இவ்வியாழன் முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பமாகியுள்ள "அறிவியுங்கள் 2012" என்ற ஒரு கருத்தரங்கில், புதிய வழிகளில் நற்செய்தி பரப்புதல் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella இவ்வாறு கூறினார்.
சமுதாயத்தின் ஓரங்களுக்குத் கிறிஸ்தவத்தைத் தள்ளிவிட்டால், புதியதொரு சமுதாயத்தை உருவாக்கலாம் என்று தவறான வழிகளில் இவ்வுலகம் நம்மைத் அழைத்துச் செல்கிறது என்று பேராயர் Fisichella எடுத்துரைத்தார்.
திருத்தந்தையர்கள் 6ம் பவுல், அருளாளர் இரண்டாம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் ஆகிய மூவரும் நற்செய்தியைப் பரப்பும் புதிய வழிகள் குறித்து எழுதியுள்ள மடல்களைத் தன் உரையில் சுட்டிக்காட்டினார் பேராயர் Fisichella.
ஆஸ்திரேலிய ஆயர் பேரவை 2012ம் ஆண்டு தூய ஆவியார் திருநாளன்று துவக்கிய அருள்நிறை ஆண்டு 2013ம் ஆண்டு தூய ஆவியார் திருநாள்வரைத் தொடரும். இந்த ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, புதிய வழிகளில் நற்செய்தி பரப்புதல் பணிகள்பற்றிய முதல் கருத்தரங்கு சிட்னி நகர் Chatswood எனுமிடத்தில் இச்சனிக்கிழமை முடிய நடைபெறுகிறது.








All the contents on this site are copyrighted ©.