2012-08-09 16:16:11

பேராயர் Celata : அனைத்து மதங்களும் உலகில் அமைதி ஏற்படுவதற்கு உழைக்குமாறு அழைப்பு


ஆக.09,2012. உலகின் அனைத்து மதங்களைச் சார்ந்த விசுவாசிகள் தங்களது மதங்களின் ஆன்மீக மரபுகளைப் பின்பற்றி உலகில் அமைதி ஏற்படுவதற்கு உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் Pier Luigi Celata.
ஒவ்வொரு மதத்தினரும் பரிவு, இரக்கம், மன்னிப்பு, அன்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்தி நாம் எல்லாரும் ஒரே மனிதக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வில் வாழுமாறும் பேராயர் Celata பரிந்துரைத்தார்.
ஜப்பானின் நாகசாகி பேராலயத்தில் இவ்வியாழனன்று திருப்பலி நிகழ்த்தி அமைதிக்காகச் செபித்த, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் செயலர் பேராயர் Celata, 67 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
இத்தாக்குதலில், பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு, நாம் இறைவனிடம் அமைதிக்காகச் செபிக்குமாறு இந்நிகழ்வு வலியுறுத்துகின்றது என்றும் அவர் கூறினார்.
அமைதியை இறைவனில் மட்டுமே அடைய முடியும் என்பதை, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது விசுவாச ஒளியில் புரிந்து கொள்கின்றோம் என்றுரைத்த பேராயர் Celata, நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார்.
இரண்டாம் உலகப்போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி மீது அமெரிக்க ஐக்கிய நாடு வீசிய Fat man என்ற அணுகுண்டுத் தாக்குதலில், அன்றே ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் இறந்தனர்.
இதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டினால் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். இத்தாக்குதல்கள் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடையக் காரணமாக இருந்தன.
நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்ட இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிப் பூங்காவில் இவ்வியாழனன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்கென அமெரிக்க ஐக்கிய நாடு முதன்முறையாகத் தனது தூதர் John Roosஐ அனுப்பியது.








All the contents on this site are copyrighted ©.