2012-08-09 16:17:30

உறுதியான மணவாழ்வே நலமான மனித சமுதாயத்தின் அடித்தளம் - கர்தினால் டோலன்


ஆக.09,2012. கடவுளின் அன்புக்கு தகுந்த சான்றாக இருக்கும் மணவாழ்க்கை, நலமானதொரு மனித சமுதாயத்தின் அடித்தளம் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
Knights of Columbus என்ற கிறிஸ்தவப் பிறரன்பு அமைப்பு கடந்த ஒரு வாரமாக கலிபோர்னியா மாநிலத்தின் Anaheim நகரில் மாநாடு ஒன்றை நடத்தியது. இவ்வியாழனன்று நிறைவுற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய நியூயார்க் பேராயர் கர்தினால் Dolan, Knights of Columbus அமைப்பின் உறுப்பினர்கள் திருமண வாழ்வுக்கு உயர்ந்த சாட்சிகளாக வாழ்வதற்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கணவன், மனைவி இருவருக்கும் இடையே உள்ள நிலையான உறவே உறுதியான குடும்பத்தையும், உறுதியான சமுதாயத்தையும் உருவாக்கும் என்றும், இத்தகையக் குடும்பங்களே இறை அழைத்தலின் விளைநிலமாய் உள்ளதென்றும் கர்தினால் Dolan எடுத்துரைத்தார்.
Knights of Columbus அமைப்பின் இந்த 130வது மாநாட்டில் இப்புதனன்று திருப்பலியாற்றி, மறையுரை வழங்கினார் Toronto பேராயர் கர்தினால் Thomas Collins.
இன்றைய உலகை நிறைத்துவரும் தவறான, பொய்மை நிறைந்த செய்திகளுக்கு மத்தியில் உண்மையான நற்செய்தியைப் பரப்பும் கடமை அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று கர்தினால் Collins தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.