2012-08-08 15:59:48

நல்லாயன் துறவு சபை அருட்சகோதரிகளைப் பற்றிய ஓர் ஆவணப்படம்


ஆக.08,2012. குடும்பங்களுக்குள் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களையும், குழந்தைகளையும் மீட்டு, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நல்லாயன் துறவு சபை அருட்சகோதரிகளைப் பற்றிய ஓர் ஆவணப்படம் அண்மையில் வெளியானது.
Taiwan நாட்டின் Taipei, Kaohsiung ஆகிய இரு பெரும் நகரங்களில் உழைத்து வரும் இவ்வருட்சகோதரிகளின் பணி பற்றிய ஆவணப்படத்தின் பெயர் சீன மொழியில் Pingan hao rizi, அதாவது, ஓர் அமைதியான வாழ்வு.
குடும்பங்களில் வன்முறைகளைச் சந்தித்த ஆறு பெண்களைப்பற்றிய இந்த ஆவணப்படத்தின் மூலம், தாய்வான் நாட்டில் நடைபெற்றுவரும் ஓர் ஆபத்தான போக்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, தாய்வான் நாட்டில் 2008ம் ஆண்டு 75,438 என்ற அளவில் இருந்த குடும்ப வன்முறைப் புகார்கள், 2010ம் ஆண்டு 98,720 என்ற அளவில் வளர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
1987 ம் ஆண்டு Taipei பேராயர் விடுத்த அழைப்பின்பேரில் அங்கு சென்ற நல்லாயன் துறவுசபை அருள்சகோதரிகள், குடும்ப வன்முறைகளுக்கு ஆளான பெண்களையும், குழந்தைகளையும் காக்கும் இல்லம் ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.