2012-08-08 15:03:06

திருஅவையில் திருப்புமுனைகள் – திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்ட்


ஆக.08,2012. அன்பர்களே, இரண்டாம் உலகப்போர் விட்டுச் சென்றுள்ள காலத்தால் மறக்க முடியாத பல நிகழ்வுகள் இன்றும் நமது மனதை நெருடிக் கொண்டிருக்கின்றன. இத்திங்களன்று உலகம் நினைவுகூர்ந்த ஹிரோஷிமா தினமும் அதில் ஒன்று. ஒருநொடிப் பொழுதில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு கொண்ட நாள் அது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் ஹிட்லரின் யூதமத விரோதப்போக்கால் வதைமுகாம்களில் சித்ரவதைகளுக்கு உள்ளாகி இறந்த மற்றும் கொல்லப்பட்ட யூதர்கள் ஏறக்குறைய ஆறு இலட்சம். பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை புனித மாக்ஸ்மிலியன் மரிய கோல்பே இந்த வதைமுகாமில் கொல்லப்பட்டவர். இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இவர் தனது உயிரைத் தியாகம் செய்தார். ஜெர்மானியத் தந்தைக்கும் போலந்து நாட்டுத் தாய்க்கும் பிறந்தவர் அருள்தந்தை கோல்பே. ஆனால் ஹிட்லரின் வதைமுகாமில் ஒன்றான ஆஷ்விஷில் (Auschwitz) கொல்லப்பட்ட அருள்சகோதரி திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்ட் ஒரு யூதர். கார்மேல் சபையில் வாழ்ந்து கொண்டே ஹிட்லரின் கொடுஞ்செயல்களைப் பொதுப்படையாகத் துணிச்சலுடன் கண்டித்து குரல் கொடுத்தவர். ஹிட்லரின் அடாவடிச் செயல்களையும், அநீதியையும் கண்டித்துப் பேசியதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை ஆஷ்விஷ் வதைமுகாமில் நச்சுவாயுக்கள் அறை. 1993ம் ஆண்டில் வெளியான Schindler's List என்ற திரைப்படத்தைப் பார்த்திருந்தால் ஹிட்லரின் நாத்சிகளால் யூதர்கள் இந்த வதைமுகாம்களில் எவ்வாறு சித்ரவதைப்படுத்தப்பட்டார்கள் என்பது ஓரளவு புரிந்திருக்கும். “இஸ்ரயேலின் மிகச் சிறந்த மகள் எடித் ஸ்டெய்னின் வாழ்க்கைச் சாட்சியத்துக்கு முன்பாக நாம் தலைவணங்குவோம். இன்றும் நம் அனைவரையும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் ஆழமான மனக்காயங்கள் நிறைந்த வரலாற்றைக் கொண்ட 20ம் நூற்றாண்டின் தொகுப்பாக இருக்கிறார். கார்மேல் சபையின் மகளான இந்த அருள்சகோதரி எடித் இறைவனில் முழுமையாக இளைப்பாறும்வரை அவர் நிலைகொள்ளவில்லை. அவரது வீரமரணத்துக்கு முன்பாக நாம் மண்டியிடுவோம்.” இவ்வாறு 1987ம் ஆண்டு மே முதல் தேதி ஜெர்மனியின் Cologne நகரில் கூறினார் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால். அருள்சகோதரி திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்டை அருளாளர் என அறிவித்த திருப்பலியில்தான் இவ்வாறு சொன்னார் திருத்தந்தை 2ம் ஜான் பால். அன்பர்களே, இந்த அருள்சகோதரி யார்?
1891ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் அப்போதைய ஜெர்மனியின் Breslau நகரத்தில் யூதப் பெற்றோருக்கு வீட்டின் கடைக்குட்டியாக 11வது குழந்தையாகப் பிறந்தார் எடித் ஸ்டெய்ன். இந்நகரம் தற்போது போலந்து நாட்டில் Wroclaw என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இக்குழந்தைக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் Edith Stein. எடித் யூதர்களின் முக்கிய விழாவான Yom Kippur அதாவது பாவக்கழுவாய் விழாவின் போது பிறந்ததால் இவர் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவருக்கு 2 வயது நடந்த போது அப்பா இறந்து விட்டார். தாய் கடின உழைப்பாளி, பக்தி மிக்கவர். ஆனால் எடித் அறிவாளி. படிப்பில் கெட்டிக்காரி. மெய்யியல் படிப்பில் சிறந்து விளங்கினார். உண்மையைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 14வது வயதில் கடவுளை நம்புவதைக் கைவிட்டார். தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்தார். “கடவுள் இல்லை என்று அறிவிலிகளே சொல்வார்கள்” என்ற ஒரு சொலவடை உண்டு. இது எடித்தின் வாழ்வில் உண்மையானது. எடித் எட்மண்ட் ஹஸ்ரல் என்பவரின் மெய்யியல் அறிவால் ஈர்க்கப்பட்டிருந்த காலத்தில் ஒரு சிறந்த கத்தோலிக்கப் பேராசிரியரின் விதவை மனைவிக்கு உதவிகள் செய்து வந்தார். இந்த விதவை, தனது அத்தனை துன்பங்களிலும் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நம்பி அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தது எடித்தின் வாழ்வை மாற்றியது. அத்துடன், ஒருசமயம் தனது நண்பரின் இல்லம் சென்றிருந்த சமயத்தில் புனித அவிலா தெரேசாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. அதையும் எடுத்து வாசித்தார் எடித். இது அவரது அகக் கண்களை முழுவதும் திறந்தது. இதன் விளைவாக திருமறை விளக்க நூல் ஒன்றையும் திருப்பலி புத்தகம் ஒன்றையும் வாங்கி வாசித்தார். மனமாறினார். கத்தோலிக்க விசுவாசத்தைத் தழுவினார். அருட்பணியாளரின் வேண்டுகோளின் பேரில் ஆசிரியராகவும் பணி செய்தார். அச்சமயத்தில்தான் ஜெர்மனியில் யூதர்களை சித்ரவதைப்படுத்தும் படலம் தலைதூக்கியது.
எடித் கற்றுக் கொடுக்கக் கூடாது என்ற கட்டளை பிறந்தது. இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றினார் அவர். 1933ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கொலோன் நகர் கார்மேல் சபையில் சேர்ந்தார். திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்ட் என்ற புதிய பெயரையும் ஏற்றார். திருச்சிலுவையினால் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசா என்பது இதன் பொருள். ஹிட்லரின் அட்டூழியங்கள் மீண்டும் 1937ம் ஆண்டில் தலைவிரித்தாடின. ஜெர்மனியில் யூதர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததையும் அவர்களது வளமான வாழ்வையும் ஹிட்லரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் அடையாளமாக முதலில் கொலோன் யூதமதத் தொழுகைக்கூடத்தைத் சீக்கிரையாக்கினான் ஹிட்லர். ஹிட்லரின் இந்தக் கொடுமைகள் கண்டு கொதித்தெழுந்த அருள்சகோதரி தெரேசா, ஹிட்லருக்கு யாரும் ஓட்டுப்போடக் கூடாது. அவன் கடவுளின் மாபெரும் எதிரி. கடவுளின் கோபத்தைக் கொணர்ந்து ஜெர்மனியைத் தரைமட்டமாக்குவான் என்று குரல் எழுப்பி வந்தார். எனவே இச்சகோதரியின் பாதுகாப்புக்காக இவரையும், கத்தோலிக்கத்துக்கு மாறியிருநத் எடித்தின் இன்னொரு சகோதரி ரோசாவையும் ஹாலந்தின் Echt கார்மேல் மடத்துக்கு அனுப்பி வைத்தனர். எனினும், ஹிட்லரின் நாத்சிப் படைகள் 1940ம் ஆண்டில் ஹாலந்தை ஆக்ரமித்தன. தெரேசா, ரோசா மற்றும் பல மனமாறிய யூதர்கள் கைது செய்யப்பட்டு ஆஷ்விஷ் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அம்முகாமில் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 9 அல்லது 10ம் தேதி நச்சுவாயு அறைகளில் இறந்தார் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட மறைசாட்சியான அருள்சகோதரி தெரேசா. இவர் எழுதியவை, “கடவுளின் கரங்களில் வாழக் கற்றுக் கொள்ளுதல்” என்ற தலைப்பில் 17 தொகுப்புகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
அருள்சகோதரி திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்டை 1998ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி புனிதர் எனவும் அறிவித்தார் திருத்தந்தை 2ம் ஜான் பால். அந்தத் திருப்பலியில் அவர் இளையோரைப் பார்த்துச் சொன்னார் : “இச்சகோதரி யூதராக இருந்ததால் அவரது சகோதரி ரோசா, பல கத்தோலிக்கர் மற்றும் பல யூதர்களுடன் ஹாலந்திலிருந்து போலந்திலுள்ள Auschwitz வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நச்சுவாயு அறைகளில் இறந்தார். இன்று அவரை நாம் முழுமதிப்புடன் நினைவுகூர்கிறோம். இவர் இங்கு கொண்டு செல்லப்படுவதற்குச் சிலநாள்களுக்கு முன்னர் இவரைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை வேண்டாம் என மறுத்துவிட்டார். நான் எனது வாழ்வை எனது மற்ற சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது வாழ்வு அழிந்ததாக இருக்கும் என்று சொன்னார்”.
ஈட்டியில் குத்திக் காயப்பட்ட இயேசுவின் இதயத்தில் விண்ணகமும் மண்ணகமும் ஒன்றிணைகின்றன. இவ்விதயமே வாழ்வின் ஊற்று என்று சொன்னவர் அருள்சகோதரி திருச்சிலுவையின் புனித தெரேசா பெனடிக்ட். இவரது திருவிழா, ஆகஸ்ட் 9 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுகிறது. இவரது மெய்யியல் அறிவாலும் ஆன்மீக வாழ்வாலும் கவரப்பட்ட திருத்தந்தை 2ம் ஜான் பால், இச்சகோதரியை ஐரோப்பாவின் ஆறு பாதுகாவலர் புனிதர்களில் ஒருவராகவும் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.