2012-08-08 15:37:29

கிறிஸ்தவர்கள், வாழ்நாள் முழுவதும் வன்முறையின் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது - கர்தினால் பீட்டர் டர்க்சன்


ஆக.08,2012. வன்முறைகளைச் சந்தித்துவரும் கிறிஸ்தவர்கள் உடலளவில் மட்டுமல்ல, உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் வன்முறையின் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் ஆகஸ்ட் 6ம் தேதி கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வத்திக்கான் செய்தித்தாள் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
2013ம் ஆண்டு உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின் மையக்கருத்து "அமைதியை உருவாக்குபவர்கள் பேறுபெற்றோர்" என்பதையும் கர்தினால் டர்க்சன் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ அமைப்புக்கள் ஆயுதங்கள் தாங்காத குழுக்கள் என்பது உலகறிந்த உண்மை என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், இதனால், ஏனைய வன்முறை அமைப்புக்களுக்கு கிறிஸ்தவர்கள் எளிதான ஓர் இலக்காக மாறி வருவது வேதனை தருகிறது என்று கூறினார்.
நைஜீரியாவில் மட்டுமல்ல, பொதுவாகவே ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும், புறநகர்களிலும், கிராமங்களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் கிறிஸ்தவ கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதும் இந்தத் தாக்குதல்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கர்தினால் டர்க்சன் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.