2012-08-07 15:29:22

விவிலியத் தேடல் - திருப்பாடல் 132, பகுதி 1


RealAudioMP3 புனிதத்தலமான எருசலேம் கோவிலை நோக்கி இஸ்ரயேல் மக்கள் திருப்பயணம் மேற்கொண்டபோது பயன்படுத்திய பாடல்களின் தொகுப்பைக் கடந்த மூன்று மாதங்களாகச் சிந்தித்து வருகிறோம். 120ம் திருப்பாடலில் ஆரம்பமான இத்தொகுப்பில், இன்று நாம் சிந்திக்கவிருப்பது திருப்பாடல் 132. எருசலேம் கோவில்பற்றிய வரலாறு இஸ்ரயேல் மக்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்த ஒரு வரலாறு. இருளும், ஒளியும், மலையும் மடுவும் கலந்த இந்த வரலாற்றின் ஒரு பகுதியை நாம் அசைபோட திருப்பாடல் 132 நமக்கு உதவுகின்றது.
எருசலேம் ஆலயத்தின் வரலாற்றைப் புரட்டும்போது, நாம் வியப்பில் ஆழ்கிறோம், அதே நேரம் வேதனையான கேள்விகளும் எழுகின்றன. இக்கேள்விகள் 21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கும் எழுகின்றன. தாவீதின் மகன் சாலமோன் கி.மு. 957ம் ஆண்டு எருசலேம் ஆலயத்தை எழுப்பினார். ஏறத்தாழ 3000 ஆண்டுகள் வரலாறு கண்டுள்ள இந்த ஆலயம் பாபிலோனிய, எகிப்திய, உரோமைய, கிரேக்க மன்னர்களால் பல முறை தகர்க்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட ஓர் ஆலயம். இஸ்ரயேல் மக்களின் பெருமைக்கு ஓர் அடையாளமாக இருந்த இக்கோவில் அரசியல் மோதல்களின் அரங்கமாக மாறியது என்பது இவ்வரலாற்றில் அப்பட்டமாகத் தெரிகிறது. இன்றும் எருசலேம் ஆலயம் உள்ள புனித பூமிப் பகுதி அமைதியின்றி இருக்கின்றது. எருசலேம் கோவில் மட்டுமல்ல. உலகின் பல பகுதிகளில் உள்ள பல்வேறு ஆலயங்கள் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக மாறியிருப்பது வேதனைக்குரிய ஓர் உண்மை.

எருசலேம் கோவிலை அரசியல் சூழ்ந்தததற்குக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள, கோவில் என்ற எண்ணம் இஸ்ரேல் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும். இஸ்ரயேல் மக்களுக்கும், அவர்களைச் சுற்றி வாழ்ந்த ஏனைய இனத்தவருக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகள் இருந்தன. மற்ற இனங்களை ஆள அரசர்கள் இருந்தனர், அவர்கள் வழிபட்ட தெய்வங்களுக்குக் கோவில்கள் இருந்தன. சில இனத்தவரோ அரசர்களையேத் தெய்வங்களாக வழிபட்டனர் இஸ்ரயேல் மக்களுக்கோ அரசனும் இல்லை, ஆலயங்களும் இல்லை!!!
இறைவன் அவர்கள் மத்தியில் இருந்தார் என்பதற்கு ஒரே அடையாளம் உடன்படிக்கைப் பேழை. அந்தப் பேழை வைக்கப்பட்டிருந்ததோ ஒரு கூடாரத்தில். இஸ்ரயேலர்களுக்கு அறிமுகமான இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்த பேழையும், கூடாரமும் அழகான அடையாளங்கள். இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக வாழ்ந்தவர்கள். அவர்களை மோசே அடிமைத் தளையிலிருந்து விடுவித்தபின், நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் நாடோடிகளாய் வாழ்ந்தவர்கள். அடிமைகளுக்கும், நாடோடிகளுக்கும் சொந்தம் என்று உரிமை பாராட்ட நிலங்கள் கிடையாது. அவர்கள் வேரூன்றிய மரங்கள் அல்ல, காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகுகள். இந்த நிலையில் வாழ்ந்து வந்த இஸ்ரேல் மக்களுடன் இறைவன் தன்னயே இணைத்துக்கொள்ள விரும்பினார். அந்தப் பாலை நிலத்தில் சீனாய் மலைமீது இறைவன் அவர்களுக்கு அறிமுகமானார். இவ்விதம் அறிமுகமான இறைவன் நிரந்தரமாக ஓரிடத்தில் தனக்கென கோவிலை உருவாக்கி உறைந்துவிடாமல், இஸ்ரயேல் மக்களோடு பயணிக்கும் ஓர் இறைவனாக உருவெடுத்தார். அவர்கள் சுமந்து சென்ற ஒரு பேழையில், ஒரு கூடாரத்தில் இறைவனும் வாழ்ந்தார். அன்று முதல் இன்று வரை அகதிகளாய், நாடோடிகளாய் வாழும் மக்களுடன் தன்னையே இணைத்துக் கொள்ளும் இறைவனுக்கு இந்த உடன்படிக்கைப் பேழையும், கூடாரமும் அழகிய உருவகங்கள்.

அரசனும், ஆலயமும் இன்றி வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. மற்ற இனத்தவரைப்போல் அவர்கள் தங்களுக்கு ஓர் அரசனை உருவாக்கிக்கொண்டனர். முதல் அரசன் சவுலுக்குப் பின், தாவீது அரசரானார். தான் வாழ அரண்மனை உள்ளது ஆனால், இறைவன் வாழ ஓர் இல்லம் இல்லையே என்ற ஏக்கம் மன்னன் தாவீதை வாட்டியது. அவரது கவலையை வெளிப்படுத்தும் வார்த்தைகளுடன் திருப்பாடல் 132 ஆரம்பமாகிறது:
திருப்பாடல் 132 1-5
ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும். அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். "ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில், என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்ல மாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்; என் கண்களைத் தூங்க விடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்" என்று அவர் சொன்னாரே.
தாவீது இவ்வளவு கவலையும், வேதனையும் கொண்டாலும் ஆலயம் அமைக்கும் அருளை இறைவன் அவருக்கு வழங்கவில்லை. அவர் மகன் சாலமோனுக்கே அந்த அருள் வழங்கப்பட்டது. அரசர்கள் இன்றி, ஆலயங்கள் இன்றி வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் அரசர்கள் தோன்றினர், ஆலயங்களும் தோன்றின. இவ்விரண்டையும் தொடர்ந்து, அரசியலும் அவர்களைச் சூழ்ந்தது. இதனால், எருசலேம் ஆலயம் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காயாக மாறியது.

இந்த அரசியல் சதுரங்கம் இயேசுவின் காலத்தில் உச்ச நிலையில் இருந்திருக்க வேண்டும். எனவேதான் இயேசுவுக்கும் எருசலேம் கோவிலுக்கும் - அதாவது, எருசலேம் கோவில் நிர்வாகத்திற்கும் இடையே உரசல்கள் நிகழ்ந்தன. அவர் சிறுவனாக இக்கோவிலுக்குச் சென்றபோது, அங்கிருந்த குருக்களைக் கேள்விகளுக்கு உள்ளாக்கினார். தன் பொதுப்பணி வாழ்வின்போது, இந்தக் கோவிலில் நுழைந்து அதனைச் சுத்தம் செய்தார். "இதை எந்த அதிகாரத்தில் செய்கிறீர்?" என்று கேட்ட குருக்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள் மூன்று நாட்களில் இதை கட்டி எழுப்புவேன்" என்று கூறினார். அவர் தன் உடலைக் குறிப்பிட்டே அவ்விதம் பேசினார் என்று யோவான் நற்செய்தி கூறுகிறது. (யோவான் 2 13-21)

எருசலேம் கோவில் இடிந்து தரைமட்டமாகும் என்றும் இயேசு துணிவுடன் கூறுகிறார் லூக்கா நற்செய்தியில்.
லூக்கா நற்செய்தி 21 5-6
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்என்றார்.

இஸ்ரயேல் மக்கள் வாழ்வின் மையம் என்று கருதப்பட்ட எருசலேம் கோவிலை ஒரு கள்வர் குகை என்று உருவகப்படுத்திப் பேசுகிறார் இயேசு. அந்தக் கோவில் காலத்தால் அழியக்கூடியது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். இந்தக் கோவிலுக்கு மாற்றாக, தன் உடலை ஒரு கோவிலென்று அவர் சுட்டிக்காட்டுகிறார். எருசலேம் கோவிலே அழிந்தாலும் பரவாயில்லை, ஆனால், நமது மனம், உடல் என்ற கோவில் அழியக்கூடாது, அவை அழியவும், அழியாது என்பது இயேசுவின் கருத்து.

பொதுவாக நாம் ஆலயங்களை எழுப்புவது எதற்காக? இறைவனின் பிரசன்னம் உறுதியாக நம் மத்தியில் இருக்கவேண்டும் என்பதன் அடையாளமாக நாம் ஆலயங்களை எழுப்புகிறோம். ஆனால், கோவிலின் மையமாக இருக்கவேண்டிய கடவுளை ஓரங்கட்டிவிட்டு, அந்தக் கோவிலை யார் கட்டினார், கோவில் யாருக்குச் சொந்தம், எந்தக் கோவிலின் கோபுரம் மிக உயர்ந்தது, எந்தக் கோவில் அதிக வருமானம் பெறுகிறது என்ற கேள்விகளில் நமது கவனம் செல்லும்போது, கோவில்கள் வெறும் ஆணவக் கட்டிடங்களாக மட்டும் நிமிர்ந்து நிற்கும், அங்கிருந்து இறைவன் வெளியேறிவிடுவார். அழுக்கடைந்த மனதோடு ஆலயத்தை ஓர் அரசியல் நிறுவனமாக நடத்திவந்தால், அங்கு ஆண்டவனுக்குப் பதில் அழுக்கே கொலுவிருக்கும். இக்கருத்தை ஓர் அழகியக் கவிதையாக வடித்துள்ளார் கவிஞர் வல்வை சுஜேன்.

கவிதைக் கனவுகள் - ஆண்டவன் தேடும் ஆலயம்
lankasripoems.com என்ற இணையதளத்தில் கவிஞர் வல்வை சுஜேன் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகள்...

ஆசை மன வாசலுக்குள்
ஆடும் ஊஞ்சல் நூல் இழையில்
இழுக் கெல்லாம் இழையேற்றி
இறை அடி தேடும் நெஞ்சே

உன் வெண் மன அகம்தனிலே
அழுக்கேறி இருள் இருக்க
நீ வடித்த கோபுரக் கூண்டுக்குள்
இறை வாழ குடி புகுவேனா சொல்

பணம் வேண்டேன் பால் வேண்டேன்
பஞ்சாமிர்த சுவை வேண்டேன்
நிறம் மாறா பால் மனம் என்றால்
நிதம் வாழ்வேன் நிழலாக உன்னிடத்தில்

அடியும் முடியும் தேடு
ஆள் மனசில் ஆசை வார்க்காதே
பொய் சுமந்த தாழம் பூவானால்
பூநாகமே குடிபுக புறையோடும் உன் மனசு

மனம் எனும் கோயிலிற்குள்
மிதவாத முள் எதற்கு
உன் வெறி கொண்ட வேள்வியில்
தறி கொண்டோடுதே குருதி
நதியாகி நானிலத்து

ஆலயங்கள் நீ வளர்த்து
அதில் ஆராதனை ஒளி வளர்த்து
தாழிட்ட கதவுக்குள் சிறையிட்டு
சிதைக்கிறாய் என்னை சிலையிருத்தி

உள்ளக் கோயிலைத் தூய்மையாக்கு
இல்லார்க்கு ஈர்ந்து கொடு
பூசைக்குகந்த புஸ்பங்களாவாய்
ஆட் கொள்வேன் உன்னை
ஆராதனை வேளை
நான் தேடும் ஆலயம் வெண் இதயமே.

நாம் வாழும் காலத்தில் கோவில்கள் வன்முறைகளின் போர்க்களங்களாக மாறி வருவதைக் காணும்போது, கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்கள் எதற்கு என்ற கேள்வி மனதை ஆழமாகக் கீறுகிறது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை மாற்றி, கோவில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லுமளவு இன்று மனித சமுதாயத்தைச் சிதைக்கும் கருவிகளாக நாம் கோவில்களைப் பயன்படுத்தி வருகிறோம். இறைவனின் பிரசன்னம் இவ்வுலகில் உறுதியாய் நிலைக்க, அவர் வாழ விழையும் முதல் இல்லம் நமது உள்ளங்கள், நமது உடல். இவ்விதம் உயிருள்ள ஆலயங்களாய் நாம் வாழ வேண்டும் என்பதையே இயேசு அன்று யூத மதத் தலைவர்களிடம் ஒரு சவாலாகக் கூறினார். அந்த எருசலேம் கோவிலை இடித்துவிடுங்கள். இதோ என் உடல் வழியாக, மீண்டும் அக்கோவிலை நான் வாழவைப்பேன் என்று இயேசு கூறியது நமக்கெல்லாம் ஓர் அழைப்பு. அதுவே இயேசுவின் கனவு. அக்கனவை புனித பவுல் அடிகளாரும் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 6ம் பிரிவில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த அற்புத வரிகளுடன் நம் தேடலை இன்று நிறைவு செய்வோம்.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 6: 19-20
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.








All the contents on this site are copyrighted ©.