2012-08-06 14:51:27

வாரம் ஓர் அலசல் – அமைதிக்கு ஆயுதம் மன்னிப்பு


ஆக.06,2012. அன்பு நேயர்களே, ஆண்டின் ஒவ்வொரு மாதமும் வரலாற்றில் நடந்த மறக்க முடியாத, மறைக்க முடியாத சில நிகழ்வுகளை, வியக்க வைக்கும் மனிதரின் சாதனைகளை நினைவுபடுத்துகின்றது. உலக வரலாற்றில் உரோமானியப் பேரரசுக்கு மிகப்பெரிய ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த Gaius Octavius என்ற அகஸ்டஸ் சீசர் பிறந்தது, “மகன்கள் மற்றும் மகள்கள்” உலக தினம், “இடதுகை பழக்கம் உள்ளவர்களின்” உலக தினம், அனைத்துலக “மன்னிப்பு” தினம், இந்திய சுதந்திர தினம்.... இப்படி சில முக்கிய நாள்கள் ஆகஸ்டில் சிறப்பிக்கப்படுகின்றன. இத்திங்கள் (06.08.12) அமெரிக்க ஐக்கிய நாட்டு விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படும் நிகழ்வு ஒன்றும் நடந்துள்ளது. இத்திங்கள் இந்திய நேரம் காலை 11.12 மணியளவில், ரோவர் விண்கலம் ஏறக்குறைய எட்டு மாதப் பயணத்திற்குப் பிறகு வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. சிவுப்புக்கோளம் எனப்படும் செவ்வாய்க் கிரகத்தில், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நாசா ஆய்வு மையம் அனுப்பிய ரோவர் விண்கலம், இத்திங்களன்று செவ்வாய்க் கிரகத்தின் புவிவட்ட பாதைக்குள் நுழைந்ததும், அதிலிருந்த ஒரு டன் எடையுள்ள க்யூரியாசிட்டி(Curiosity) என்ற வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது. பூமியிலிருந்து ஏறக்குறைய 57 கோடி கி.மீ., தொலைவிலுள்ளது செவ்வாய்க் கிரகம். இதனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ரோவர் விண்கலத்தை உருவாக்க 250 கோடி டாலர் செலவு செய்திருக்கிறது அமெரிக்கா. இப்படி அரிய சாதனைகளைப் படைத்துவரும் அமெரிக்க ஐக்கிய நாடுதான், ஹிரோஷிமா பேரழிவையும் அரங்கேற்றியது.
இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமாவும் நாகசாகியும் எதிரிகளின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தும், அணுகுண்டுகளால் பேரழிவைச் சந்தித்தன. ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அரசுத்தலைவர் Harry S. Truman, இந்தத் தாக்குதல் குறித்து அறிவித்த பிறகே அந்நகரில் அணுகுண்டு வீசப்பட்ட செய்தி ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்குத் தெரிய வந்ததாகச் சொல்லப்படுகிறது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியன்று நாகசாகி மீது Fat Man எனும் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இவற்றால் ஹிரோஷிமாவில் ஏறக்குறைய 1,40,000 பேரும், நாகசாகியில் ஏறக்குறைய 90,000 பேரும் உயிரிழந்தனர். இவ்விரு நகரங்களும் முற்றிலுமாக அழிந்து சுடுகாடாக காட்சியளித்தன. அத்தகைய பேரிழப்பிற்குப் பிறகும்கூட கதிர்வீச்சு போன்ற பல்வேறு காரணங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,30,000 என்று சொல்லப்படுகிறது.
ஆயினும் மனிதர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சிரியாவில் சண்டை நாளுக்குநாள் வலுவடைந்து வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டு Wisconsinல் இஞ்ஞாயிறன்று சீக்கிய கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். ஒருமுறை புகழ் பெற்ற அணு அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், அவரது நண்பர் ஒருவர், ‘மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்’ என்று கேட்டாராம். அதற்கு அவர் ‘மூன்றாவது உலகப் போர்ப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும் வில்லும் பயன்படுத்தப்படும்’ என்று பதில் சொன்னாராம். இந்தப் பதிலை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்கிறார் பி.கே.மனோகரன், தன்னம்பிக்கை என்ற வலைத்தளத்தில். மூன்றாவது உலகப் போரில் ஆணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன்பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்தக் கற்காலத்தில் கல்லும், வில்லும் தானே கருவிகளாக இருக்கும். அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதை குறிப்பால் உணர்த்தவே அணு அறிவியலாளர் இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார்.
1945ம் ஆண்டு முதல் இதுவரை உலகில் சுமார் 1,30,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணுஆயுத ஒழிப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ முப்பதாயிரம் அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுமார் பத்தாயிரம், பிரிட்டனில் 200, பிரான்சில் 350, சீனாவில் 200 எனவும், அணு ஆயுத நாடுகள் என்று அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 12 ஆயிரம் அணு ஆயுதங்கள் ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன. இவற்றில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன எனவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உலகம் இத்தகைய அச்சுறுத்தலில் இருந்துவரும்வேளை, ஆயுதங்களால் அமைதி ஒருபோதும் கிட்டாது, மன்னிப்பாலும், அன்பாலும் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும் என்று பல ஆன்மீகத் தலைவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக மன்னிப்பு நாளும் இதைத்தான் வலியுறுத்துகின்றது. “மன்னிப்பின்றி எதிர்காலம் இல்லை, மன்னிப்பே அனைத்தையும் குணமாக்கும் மாபெரும் மருந்து” என்ற விருதுவாக்குடன் ஆகஸ்ட் 5 இஞ்ஞாயிறன்று அனைத்துலக மன்னிப்பு நாள் சிறப்பிக்கப்பட்டது.
உள்நாட்டுப் போர் முடிந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நாடுகளிடம் வலியுறுத்தப்படுவது மன்னிப்பு. மன்னிப்பதாலும், மன்னிப்புப் பெறுவதாலும் மட்டுமே உள்ளத்தில் அமைதியை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு மனிதரிலும் குடிகொண்டிருக்கும் அமைதியே சமுதாய அமைதிக்கு வழிஅமைக்கும். குடும்பங்களிலும் சமூகங்களிலும் நாடுகளுக்கு இடையேயும் இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய முக்கியமான முயற்சிகளில் மன்னிப்பு முக்கியமானதாகும். மன்னிப்பு என்பது ஒரு பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் விடுவதோ அல்லது பிறர் தொடர்ந்து மோசமாக நடத்துவதற்குத் தன்னை அனுமதிப்பதோ அல்ல. மாறாக, வன்முறை, நெறிதவறிய உறவுகள் போன்ற ஆபத்தான சூழலிலிருந்து வெளியே வருவதற்கு உதவுவது இது. கோபம், மனக்காயங்கள், பழிவாங்கும் உணர்வு போன்றவை வாழ்வைப் பாதிக்காமல் இருப்பதற்கு ஒருவர் எடுக்கும் தீர்மானமாகும். ஏனெனில், காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாசல்கள். இவை நம் ஆன்மாவைக் களங்கப்படுத்தும் மோசமான எதிரிகள் என்று நீதிநூல்கள் சொல்கின்றன.
காந்திஜி தென்னாப்ரிக்காவின் டர்பனில் முதலில் வாடகைக்கு இருந்த வீட்டில் கழிவறை வசதிகள் சரியாக இல்லை. அதனால் ஒவ்வோர் அறைக்கும் முன்பாக ஒரு சிறுநீர் கலயம் வைக்கப்படும். அதனைத் துப்புரவுத் தொழிலாளி ஒவ்வொரு நாள் காலையிலும் வந்து சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் காந்திஜி, இந்தப் பணியைத் தானே செய்து கொள்ள முடிவெடுத்தார். அவரைப் பார்த்து அவரது மனைவி கஸ்தூரிபாயும் செய்ய முன்வந்தார். நாளடைவில் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த உடன்பணியாளர்களின் கலயத்தையும் இவர்களே சுத்தம் செய்தனர். அவ்வீட்டில் பலநாள்கள் பழகியவர்கள் அவரவர்களே சுத்தம் செய்யத் தொடங்கினர். ஆனால் ஒருசமயம் புதிதாய்ப் பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர் ஒருவரின் அறைக்கு முன்பிருந்த கலயத்தை எடுப்பதற்கு கஸ்தூரிபாய் மறுப்பு தெரிவித்தார். ஏனெனில் அவர் ஒரு தீண்டத்தகாத கிறிஸ்தவர். இதைக்கண்டு காந்திஜி கோபம் கொண்டார். கஸ்தூரிபாயை வீட்டைவிட்டு வெளியே தள்ளி கதவை மூடப்போனார். அப்போது அவர் காந்திஜியிடம், “இப்படியா உணர்வற்ற மனிதராக இருப்பீர்கள்?, தாயகத்திலிருந்து இங்கு கூட்டி வந்தது இதற்காகத்தானா?, என்னை அடித்தாலும் உதைத்தாலும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?” எனச் சரமாரி பொரிந்து தள்ளினார். கோபத்திலிருந்து மீண்டு வந்த காந்திஜி, கஸ்தூரிபாயிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர் கஸ்தூரிபாயும் மனம் மாறி அவ்வேலையை மகிழ்ச்சியோடு செய்தார்.
இவ்வாறு மன்னிப்பவரும் மன்னிப்புக் கேட்பவரும் நல்ல மனிதர்களாக வாழ்கிறார்கள். தங்கள் பெற்றோர்களைக் கொலைசெய்தவர்களை மன்னிக்கும் பிள்ளைகள் பற்றி அறிந்திருக்கிறோம். அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் விமானநிலையத்தில் கடந்த ஆண்டில் அப்துல் கலாம் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டது. பின்னர் ஒருநாள் பத்திரிகை நிருபர்கள் கலாம் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்ட போது, மறந்துருங்க மறந்துருங்க அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றே அவர் சொன்னார். இப்போது இலண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்ஸில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புகள் கேட்கப்பட்டுள்ளன. வளரும் பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்ட பெற்றோர்கள் தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதனால் பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிள்ளைகளும் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். Oprah Winfrey என்பவர் சொன்னார் : “அந்தக் கசப்பான அனுபவத்திற்காக உன்னால் நன்றி சொல்ல முடிந்தால் அதுவே உண்மையான மன்னிப்பு” என்று.
ஒருசமயம் ஒரு துறவியும் அவருடைய சீடரும் தங்களது ஆசிரமத்துக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு முரடன் அவர்களை வழிமறித்து, போலித் துறவிகள் இருவரும் எங்கே போகிறீர்கள்? என்று ஏளனமாகக் கேட்டான். துறவியோ பதிலுக்கு புன்முறுவல் பூத்தார். ஆனால் சீடரோ தனக்குள் ஏற்பட்ட கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு நடந்தார். அந்த முரடன் அவர்களை விடுவதாக இல்லை. ஊரை ஏமாற்ற இந்தக் காவி உடை வசதியாக இருக்கிறது என்று எல்லாரும் சொல்வது உண்மைதானா? என்று கேட்டான். அதற்கும் துறவி பதில் சொல்லாது அதே புன்முறுவலை உதிர்த்தார். ஆனால் சீடரோ அந்த முரடனை ஓங்கி ஓர் அறைவிட்டார். அந்த நேரமே துறவி சீடரைவிட்டு விலகி வேகமாக நடந்தார். சீடர் ஓடிச் சென்று துறவியின் பாதம் பணிந்து தான் செய்த குற்றம் என்னவென்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, மகனே, நீ கோபத்தின் பிடியில் சிக்காதவரை உன்னுள் வானத்துத் தேவதைகள் குடியிருந்தன. நீ கோபமுற்ற போது அரக்கர்கள் உன்னை ஆட்கொண்டனர். அதனால் விலகி நடந்தேன் என்றார்.
Kent M. Keith என்பவர் சொன்னார் :
“மக்கள் பலநேரங்களில் நேர்மையின்றியும் தன்னலமாகவும் இருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் அவர்களை மன்னித்துவிடு.
நீ கனிவுடன் நடந்து கொண்டால் உனது உள்நோக்கங்களைக் குறை சொல்லக்கூடும். எனினும் நீ கனிவுடன் இரு.
நீ நேர்மையாக இருந்தால் மக்கள் உன்னை ஏமாற்றக்கூடும். ஆயினும் நேர்மையாக இரு.
நீ மகிழ்ச்சியாக இருந்தால் மக்கள் பொறாமைப்படலாம், எனினும் மகிழ்ச்சியாக இரு.
நீ இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படலாம், எனினும் நன்மை செய்.
உன்னிடமுள்ளதில் நல்லதை உலகுக்குக் கொடு. அது ஒருபோதும் போதுமானதாக இருக்காது. ஆயினும் நல்லதையே கொடு. ஏனெனில் இறுதியில் உனக்கும் கடவுளுக்கும் இடையேதான் நீ உன்னைப் பார்ப்பாய். உனக்கும் அவர்களுக்கும் இடையே என்று ஒருபோதும் பார்க்க மாட்டாய்”
அன்பர்களே, கர்வம் உள்ளவர் கடவுளை இழக்கிறார். பொறாமைக்காரர் நண்பரை இழக்கிறார். கோபக்காரர் தன்னையே இழக்கிறார் என்பது நமது முன்னோர் முதுமொழி. தான் எனும் அகந்தை உணர்வு ஆணிவேராக ஆழச் சென்றிருக்கும் ஒருவரில் கோபம் விருட்சமாக வளரும். அங்கே மன்னிப்புக்கு இடமிருக்காது. எப்போதும் பகைமைக்கே பால்வார்க்கும். பகையை பகையால் வெல்ல முடியாது. அதனை அன்பால்தான் வெல்ல முடியும். மன்னிப்போம். மன்னிப்புக் கேட்போம்.







All the contents on this site are copyrighted ©.