2012-08-04 14:49:43

தாய்லாந்து ஆயர்கள் : ஆசியன் நாடுகளின் வளர்ச்சிக்கு திருஅவையின் சமூகக் கோட்பாடுகள் முக்கியமானவை


ஆக.04,2012. முதலாளித்துவம், காணும் பொருளே உண்மை என்னும் வாதம், பணத்தையும் வெற்றியையும் வெறித்தனமாகத் தேடும்நிலை ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ள ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சிக்கு திருஅவையின் விழுமியங்களும் மனிதர் மையமாக நோக்கப்படுதலும் இன்றியமையாதவை என தாய்லாந்து ஆயர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
ஆசியன் (ASEAN) என்ற பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு, தங்களுக்கிடையே கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை 2015ம் ஆண்டுக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு வருவதையொட்டி அறிக்கை வெளியிட்ட தாய்லாந்து ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஆசியன் நாடுகளின் இம்முயற்சிக்கு திருஅவையின் சமூகக் கோட்பாடுகளும் மனிதரை மையப்படுத்திய திட்டங்களும் முக்கியமானவை மற்றும் இவை உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியவை என்றும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்கள் தங்களது பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றவும், மனிதரும் அவரது மாண்பும் மதிக்கப்படவும் ஆசியன் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், கல்வித் துறையில் ஆயர்கள் பேரவைக்கும் தனிப்பட்ட மறைமாவட்டங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
ASEAN கூட்டமைப்பு இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு இவை தேவை என்றும் கூறுகிறது அவ்வறிக்கை.
ASEAN கூட்டமைப்பில், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், புருனெய், லாவோஸ், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.