2012-08-03 16:32:30

ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் : அமைதியின் பாதை, மனித வாழ்வைப் பாதுகாத்து அதை மதிக்கும் பாதை


ஆக.03,2012. அமைதியின் பாதை, மனித வாழ்வை ஆதரித்து, பாதுகாத்து அதை மதிக்கும் பாதையாகும் என்று ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் இயேசு சபைப் பேராயர் Leo Jun Ikenaga கூறினார்.
1981ம் ஆண்டு பிப்ரவரியில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் ஜப்பானுக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில், “போர் மனிதரின் வேலை; போர், மனித வாழ்வை அழிக்கின்றது; போர் மரணமாகும்” என்று சொல்லி அமைதிக்காக அழைப்பு விடுத்தார்.
உலகில் அணு ஆயுதப் போர்கள் கண்டனம் செய்யப்பட்டு, அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு அனைவரும் அமைதிக்காகத் தங்களை அர்ப்பணிக்குமாறும் திருத்தந்தை உலகினரை வலியுறுத்தினார்.
இதற்குப்பின், ஜப்பான் தலத்திருஅவையும், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை “அமைதிக்கானப் பத்து நாள்கள்” எனப் பெயரிட்டு அமைதிக்காகக் குரல் கொடுத்து வருகிறது.
இவ்வாண்டின் இந்தப் பத்து நாள்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட ஒசாகா பேராயர் Ikenaga, நாடுகளில் அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு, மக்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் அமைதி நிறைந்த சமுதாயம் உருவாக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு போடப்பட்டது. இதில் ஏறக்குறைய 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். இதன் 67வது ஆண்டு நிறைவு வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இதில் சுமார் 75 ஆயிரம் பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.