2012-08-02 15:52:11

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு நேரடி உதவிகள்


ஆக.02,2012. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசின் வழியாக இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியாகச் சென்றடையாத காரணத்தினால், நிதி உதவிகளை நேரடியாக அந்த மக்களிடமே வழங்குவது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை வைப்பில் இடுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக புதுடில்லியிலிருந்து வெளியான தகவல்களைத் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த உதவி நிதியை இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தன் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.