2012-08-01 15:26:55

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஆக, 01, 2012. திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஒரு மாத இடைவெளிக்குப்பின், இப்புதனன்று மீண்டும் தன் பொதுமறை போதகங்களைத் துவக்கினார்.
இப்புதனன்று காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் இடம்பெற்ற பொதுமறைபோதகத்தில், இப்புதன் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித அல்ஃபோன்ஸ் மரிய லிகோரி குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.
RealAudioMP3 ஆயரும் மறைவல்லுனரும், உலக மீட்பர் சபையின் நிறுவனரும், இறையியல் வல்லுனர்களின் பாதுகாவலருமாகிய புனித அல்ஃபோன்ஸ், 18ம் நூற்றாண்டின் புகழ்வாய்ந்த புனிதர்களுள் ஒருவர். எல்லா காலங்களிலும், குறிப்பாக துன்பம் மற்றும் சோதனைகளின் காலங்களில் செபம் இன்றியமையாதது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார் அல்ஃபோன்ஸ். தன் அனைத்துக் குழந்தைகளையும் இறைவன் பராமரிக்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளபோதிலும், அவரின் கதவுகளை நாம் நம்பிக்கையுடன் தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதையும் இப்புனிதர் கற்பிக்கிறார். நம் சோதனைகளை வெல்வதற்குரிய இறை உதவிகளும் செபம் மூலமே கிட்டுகின்றன. எளிய உள்ளத்துடன் எழுப்பப்படும் செபங்கள் பதில் பெறாமல் இருப்பதில்லை. இத்தகைய தினசரி செபத்தின் உன்னதத்தை புனித அல்ஃபோன்ஸ் லிகோரி நமக்குக் கற்றுத் தருகிறார். நம் வாழ்வை நன்முறையிலும் ஞானமுடனும் வாழத் தேவையான அருளைப் பெறும் வகையில் நம் இதயங்களையும் மனங்களையும் இறைமுன்னிலையில் திறக்க நம் தினசரி செபங்கள் உதவுகின்றன. புனித அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியின் எடுத்துக்காட்டு மற்றும் பரிந்துரைகள் மூலம், நீங்களும் உங்கள் குடும்பங்களும் இறைவனின் மீட்பு வல்லமையுடைய அன்பை அறிந்து, அவரின் அபரிவிதமான ஆசீரை அனுபவிப்பீர்களாக, என தன் வாழ்த்துக்களை வழங்கி இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதன் மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.