2012-08-01 15:12:19

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித அல்போன்ஸ் மரிய லிகோரி


ஆக.01,2012. RealAudioMP3 ஆன்மீகத்தில் அதிகளவு நாட்டம் கொண்டு எல்லாவற்றையும் துறந்து இறைவனே சரணாகதி என்று வாழ்ந்த மகான்கள் இறைவனின் அழைப்பை பெற்ற விதங்களை எல்லா மதங்களிலும் காண முடிகின்றது. இறைவனின் விசேட அழைப்புக்கு வயது வரம்போ, சமூகநிலையோ கிடையாது. வாழ்க்கை வெற்றிகளிலும் தோல்விகளிலும் சிலர் அழைப்பை உணர்ந்திருக்கின்றனர். பவுல் கிறிஸ்தவர்களை அழித்து ஒழிப்பதற்காக ஆவேசத்துடன் சென்று கொண்டிருந்தபோது இயேசுவின் அழைக்கும் குரலைக் கேட்டார். புனித இலொயோலா இஞ்ஞாசியார், சண்டையில் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது இறையழைப்பை உணர்ந்தார். புனித பிரான்சிஸ் அசிசி, அசிசிக்கும் பெரூஜியாவுக்கும் இடையே நடந்த சண்டையில் போர்க் கைதியாகி விடுதலை அடைந்தவுடன் அனைத்தையும் துறக்கத் துணிந்தார். இன்று நாம் கேட்கும் புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார் ஒரு வழக்கில் அடைந்த தோல்வியில் இறை ஊழியத்துக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கத் துணிந்தார்.
16 வயதிலே சட்டம் பயின்ற வழக்கறிஞரான அல்போன்ஸ், 19வது வயதில் நீதிமன்றங்கள் ஏறினார். இவர் எடுத்து நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. 27 வது வயதில் நேப்பிள்ஸ் மாநில வழக்கறிஞர் அமைப்பு ஒன்றுக்குத் தலைவராகவும் இருந்தார். ஆனால் 1723ம் ஆண்டில் ஒருநாள் நேப்பிள்ஸ் பிரபு ஒருவருக்கும், டஸ்கன் பிரபு ஒருவருக்கும் இடையே 5 இலட்சம் டாலர் பெறுமான சொத்து வழக்கில் அல்போன்சும் வாதாட வேண்டியிருந்தது. ஆனால் அவர் தனது சாட்சியைக் கூப்பிடுவதற்கு முன்னதாகவே அவரது வாதத்தில் பிழை இருந்ததாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இந்தத் தோல்வி அவரை வெட்கித் தலைகுனிய வைத்தது. “உலகே, உன்னைத் தெரிந்து கொண்டேன், நீ இனிமேல் என்னைப் பார்க்க மாட்டாய்” என்று சொல்லி நீதிமன்றத்தைவிட்டுக் கிளம்பினார். மூன்று நாள்கள் சாப்பிட மறுத்துவிட்டார். இந்தத் தலைகுனிவானது, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார். 27வது வயதில் தனது வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் இறைவனின் விருப்பத்தைத் தேடினார். மிகவும் வறிய நிலையிலிருந்த ஏழைகளுக்கு மறைப்பணியாற்றிய “நேப்பிள்ஸ் பிரச்சாரம்” என்ற அருட்பணியாளர்கள் அமைப்பால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவினார். 1726ம் ஆண்டில் அல்போன்சும் குருவானார். “அடுத்தவருடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருப்பதே மிகவும் நேர்த்தியான பிறரன்பு” என்று இவர் சொல்வதுண்டு.
RealAudioMP3 அல்போன்ஸ் எப்போதும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கருத்தாய் இருந்தார். இவ்வாறு 1732ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உலக மீட்பர் சபையைத் தொடங்கினார். சுமார் 20 வருடங்கள் நேப்பிள்ஸ் மாநிலத்தில் ஓய்வின்றிப் பயணம் செய்து எண்ணற்ற மக்களை மனந்திருப்பினார். 1752ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதுவதில் தன்னை அர்ப்பணித்தார் அல்போன்ஸ். இவர் படித்தவை, எழுதியவை அனைத்தும் எளிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு ஆன்ம வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. அறநெறி இறையியல் பற்றி இவர் எழுதியவை, “அறநெறி இறையியலாளர்களின் இளவரசர்” என்ற பெருமையைத் தேடித் தந்தது. இன்றும் உரோமையில் அறநெறி இறையியல் கல்விக்கு இவரது உலக மீட்பர் சபை நடத்தும் நிறுவனமே புகழ்பெற்றது. இவர் திருநற்கருணை மற்றும் அன்னைமரியா மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாவின் பெருமை, திருநற்கருணை சந்திப்பு, கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, சிலுவைப்பாதை போன்ற இவரது நூல்கள் புகழ் பெற்றவை. இவர் 111 நூல்களை எழுதியுள்ளார். அவை 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 4000த்துக்கும் மேற்பட்ட பதிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. அறிவில்லாத பக்தியும், பக்தியில்லாத அறிவும் பயனற்றது என்பதற்கு அல்போன்ஸ் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
RealAudioMP3 நேப்பிள்ஸ் மாநிலத்தில் புனித ஆகத்தா தெய்கோத்தி என்ற சிறிய மறைமாவட்டத்தின் ஆயராகவும் நியமிக்கப்பட்டார் அருட்பணி அல்போன்ஸ். 13 வருடங்கள் கடுமையாக உழைத்து தனது மறைமாவட்டத்தைச் சீர்படுத்தினார். ஜான்சனிசத் தப்பறைக் கொள்கையைப் பெருமளவில் கட்டுப்படுத்தி இறைவனின் அளவற்ற இரக்கத்தை மக்கள் முழுமையாகக் கண்டுணரச் செய்தார். இவ்வளவு மறைப்பணிகள் செய்து திருஅவையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த இவரின் இறுதிக்கட்ட வாழ்வு மிகவும் வேதனைக்குரியதாய் இருந்தது. தான் ஆரம்பித்த சபையினராலேயே சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இவரது கடைசிக் காலத்தில் கடும் காய்ச்சல் வந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். 79வது வயதில் செவித்திறனை இழந்தார். கண்பார்வையையும் இழந்தார். இவருக்கு குழாய் வழியாகவே உணவு கொடுக்க வேண்டியிருந்தது. 1780ம் ஆண்டில் பெரியதொரு சோதனையைச் சந்தித்தார் இவர். நேப்பிள்ஸ் அரசன் இவரது துறவற சபை ஒழுங்குகளை அங்கீகரிப்பதில் காலம் கடத்தினார். இந்தச் சபை எப்போதும் எந்தச் சொத்தின்மீதும் உரிமை கொண்டாடக் கூடாது என்ற நிபந்தனையை வகுத்தார். புனித அல்போன்சும் தனது ஒப்புதலை அளித்தார். ஆனால் அரண்மனையில் வேலை செய்த ஓர் உயர் அதிகாரி எவருக்கும் தெரியாமல் இந்தச் சட்டத்தின் நிபந்தனையை மாற்றி எழுதிவிட்டார். அல்போன்சும் முதிர்ந்த வயதில் பார்வையிழந்த நிலையில் எதுவும் அறியாதவராக அதில் கையெழுத்துப் போட்டார். இது 1749ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அங்கீகரித்த இச்சபையின் சட்ட ஒழுங்குகளைப் பெரிதும் மாற்றியது. சபையில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. 83ம் வயது வரை இவரை சபையிலிருந்து நீக்கி வைத்தனர். நேப்பிள்ஸைச் சார்ந்தவர்கள் இவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்று அப்போதைய திருத்தந்தையே கட்டளையிட்டார். நோயின் வேதனையோடு இந்தக் கொடுமையையும் தாங்கிக் கொண்டார். ஆயினும் இந்தப் பிளவு அல்போன்ஸ் இறக்கும்வரைத் தீர்க்கப்படவே இல்லை.
இத்தாலியின் நேப்பிள்ஸ்க்கு அருகிலுள்ள மரியனெல்லா என்ற ஊரில் 1696ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர் அல்போன்ஸ் மரிய லிகோரி. இவர் 1787ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நொச்சேரா தெ பகானி என்ற ஊரில் இறந்தார். இவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டு ஆழமான ஆன்மீக வாழ்க்கையில் புகழ் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் அக்காலம், Port Maurice புனித லெயோனார்டு, புனித சிலுவை பவுல், புனித அல்போன்ஸ் மரிய லிகோரி ஆகிய மூன்று பெரும் புனிதர்களைத் திருஅவைக்குத் தந்துள்ளது. திருத்தந்தை 16ம் கிரகரி, 1839ம் ஆண்டு மே 26ம் தேதி புனித அல்போன்ஸ் மரிய லிகோரியைப் புனிதராக அறிவித்தார். திருத்தந்தை 9ம் பயஸ், 1871ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இவரை திருஅவையின் மறைவல்லுநர் என அறிவித்தார்.
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை என்று புனித பவுல் எழுதியிருப்பது போல வாழ்ந்தவர் புனித அல்போன்ஸ் மரிய லிகோரி. இவர் சொன்னார்:“கனியை அறிந்து கொள்ள விரும்புவர்கள் மரங்களுக்குச் செல்லுங்கள். இயேசுவை அறிந்து கொள்ள விரும்புவர்கள் மரியாவிடம் செல்லுங்கள். மரியாவைக் கம்டு கொள்பவர்கள் நிச்சயமாக இயேசுவை அறிந்து கொள்வார்கள்” என்று.
ஆகஸ்ட் முதல் தேதி புனித அல்போன்ஸ் மரிய லிகோரி திருவிழா. Redemptorists என்று பொதுவாக அழைக்கப்படும் இவர் ஆரம்பித்த உலக மீட்பர் சபையில் இன்று சுமார் 5,300 பேர் உள்ளனர். இவர்கள் 78 நாடுகளில் பணிபுரிகின்றனர். "Copiosa Apud Eum Redemptio " அதாவது "அளவில்லா மீட்பு அவருடனேயே" என்பது இத்துறவு சபையின் விருதுவாக்கு.







All the contents on this site are copyrighted ©.