2012-08-01 15:59:57

ஒலிம்பிக் வீரர்களின் கத்தோலிக்க விசுவாச அறிக்கைகள்


ஆக.01,2012. கடந்த மூன்று ஆண்டுகள் என் பள்ளியில் உள்ள கோவிலில் இறைவனின் சந்நிதியில் நான் செலவிடும் நேரங்கள் மிகவும் முக்கியமான நேரங்கள் என்று இத்திங்களன்று ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற Missy Franklin என்ற இளம்பெண் கூறினார்.
அண்மையில் அமெரிக்காவின் திரைஅரங்கு ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டினால் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ள கொலொராடோ மாநில அரோராவில் இயேசு சபையினர் நடத்தும் Regis உயர்நிலைப் பள்ளியில் பயிலும் Missy Franklin, தனது பள்ளி வாழ்க்கையில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்க தான் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.
இதேபோல், இச்செவ்வாயன்று ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குழுவில் ஒருவரான Jordyn Wieber, என்ற 17 வயது பெண், குடும்பத்துடன் தான் கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வது தனக்கு மிகவும் உறுதிதரும் ஒரு பழக்கம் என்று கூறினார்.
வாழ்வில் நான் சந்தித்துள்ள பல பிரச்சனைகளில் இறைவன் என்னை வழிநடத்தி வந்துள்ளதை முழுவதும் நம்புகிறேன் என்று Lopez Lomong என்ற இளைஞர் கூறினார்.
சூடானில் பிறந்த Lopez Lomong, ஆறு வயதில் அந்நாட்டு போராளிகளால் கடத்தப்பட்டு, அங்கிருந்து தப்பியவர். அவர்கள் பிடியிலிருந்து தப்பிய Lopez, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களின் உதவியுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சென்றடைந்து, தற்போது அந்நாட்டின் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடவுள் எனக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதை நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்து வருகிறேன் என்று Lopez Lomong, ICN என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது, விளையாட்டு வீரர்களுடன் இறைவன் உடனிருக்கிறார் என்பதை வலியுறுத்தும் பல முயற்சிகள், இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து நடத்தும் "தங்கத்திற்கும் மேலாக" ("More than Gold") என்ற அமைப்பின் வழியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.