2012-07-31 16:22:11

கவிதைக் கனவுகள் - தீப்பிழம்புக்குத் திருநாள்


ஜூலை 31, இச்செவ்வாயன்று, இயேசுசபை என்ற துறவு சபையை நிறுவிய புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாள். ‘இனிகோ’ என்றழைக்கப்படும் இப்புனிதரைப் பற்றி, அருள் பணியாளர் இயேசு கருணா என்பவர் புனைந்துள்ள கவிதை இது.

இனிகோ என்ற சொல்லுக்குப் பொருள்... நெருப்பு - அந்தத்
தீப்பிழம்புக்கு இன்று திருநாள்.
கடவுளுக்காகக் காயம்பட்ட வீரர்கள் மத்தியில்
காயம்பட்டதால் கடவுளைக் கண்டவர் இனிகோ!
வீரம்! வெற்றி! என்று பற்றி எரிந்தவருக்கு
வெற்றி வந்தது வெற்றிடத்தில் இருந்து...
காலில் பட்ட குண்டடி, கட்டிலில் இவரைப் பிணைத்தது.
மனதில் பட்ட மௌன அடி, வெற்றிடத்தில் இவரைப் பிணைத்தது.

வெறுமையை விரட்ட, வாசிக்க விரும்பினார் ‘வீரர்கள் வரலாறு’
கிடைத்ததோ ‘புனிதர்கள் வரலாறு’
புத்தகம் இவரை வாசிக்கும்வரை வாசித்தார்.
"இவருக்கும், அவருக்கும் புனிதம் சாத்தியமென்றால்
எனக்கு ஏன் இல்லை?"
புத்தகத்தை மூடியபின்னும் வாசித்தார் தன் எண்ணங்களை.
உறுதி எடுத்தார் புனித வாழ்விற்கு.

வாழ்வின் முதல் வெற்றி... வாழ்வைப் பெற்ற வெற்றி.
மருத்துவனின் கத்திபோல் இந்த அனுபவம்
வலித்தது, ஆனால், வலி போக்கியது!
வலி தீர்ந்த இனிகோவுக்கு வழி தெரிந்தது.
பயணம் புறப்பட்டார்.

இனிகோ என்ற நெருப்பு விதைத்ததோ, 'இயேசு சபை' என்ற கனவு
திருஅவையின் தீமைகளைத் திருத்தவந்த நெருப்பு.
இந்த நெருப்பை அணைக்க, அடுக்கடுக்காய் பல முயற்சிகள்...
ஊதி அணைப்பதற்கு இனிகோ என்ன மெழுகுதிரியா? அவன், ஆதவன்!

காலில் அடிபட்டதால், தன்னைக் கண்டவர்...
அன்றாடம் அடிபடும் மனித முகங்களில்
இறைவனைக் காண,
இறைவனின் புகழைக் காண,
இன்றும் உலகில் உழைக்கிறார்,
இயேசுசபைத் தோழர்கள் வழியே...
இனிகோ என்ற சுடருக்கு அழிவில்லை!








All the contents on this site are copyrighted ©.