2012-07-30 16:02:02

நம்மிடமுள்ள மிகக் குறைவானதையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் புதுமை எப்போதும் மீண்டும் நிகழும் - திருத்தந்தை


ஜூலை,30,2012. நம்மிடம் என்ன இல்லை என்பதை இயேசு கேட்கவில்லை, மாறாக, நாம் ஒவ்வொருவரும் நம்மிடமுள்ள மிகக் குறைவானதையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தால், நம் வாழ்க்கையில் புதுமை எப்போதும் மீண்டும் நிகழும் என்பதை, அப்பம் பலுகிய புதுமையின் மூலமாக இயேசு நமக்குக் காட்டுகிறார் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செயதி வாசகத்தை (யோவா, 6:8) மையமாக வைத்துப் பேசினார்.
5 அப்பங்களையும் 2 மீன்களையும் பலுகச் செய்த நிகழ்வில், இவ்வளவு மக்களுக்கு எவ்வாறு உணவளிக்க முடியும் என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்ட போது அங்கிருந்த சிறுவன் தன்னிடமிருந்த 5 அப்பங்களையும் 2 மீன்களையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தான் என அறிகிறோம் என்ற திருத்தந்தை, இந்தப் புதுமை ஒன்றுமில்லாமையிலிருந்து நிகழவில்லை, ஆனால் ஒரு சாதாரண சிறுவன் தன்னிடமிருந்ததைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதிலிருந்து நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.
நம் ஒவ்வொருவரின் சிறிய அன்புச் செயல்களையும் கடவுள் பலுகச் செய்யவல்லவர் மற்றும் அவரது கொடையில் நம்மை பங்குதாரர்களாக ஆக்குகிறார் என்றும் கூறினார் அவர்.
இப்புதுமையைக் கண்டு கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து இயேசுவில் புதிய மோசேயை, புதிய மன்னாவைப் பார்த்தனர், பொருள்சார்ந்த கண்ணோட்டத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டனர், அவர்கள் அவரை அரசராக்க விரும்பியதை அறிந்து இயேசு மலைக்குத் தனியாகச் சென்றார் (யோவா, 6:15) என்றார் திருத்தந்தை.
இப்பூமியை ஆளும் அரசர் அல்ல இயேசு, ஆனால் அவர் மனிதரின் உடல் பசியை மட்டுமல்ல, அதைவிட ஆழமான ஒன்றான இறைவனுக்கானப் பசியையும் தீர்த்து வைப்பவர் என்று கூறினார் திருத்தந்தை.
எனவே திருநற்கருணை விருந்தில் விசுவாசமுடனும் மிகுந்த ஆர்வமுடனும் பங்கு கொண்டு கிறிஸ்துவின் உடலால் நாம் போஷிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டுணருவதற்கு இயேசுவிடம் செபிப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்.
மனித மாண்புக்கும், வன்முறை ஆயுதங்களால் அல்ல, ஆனால் பகிர்வு மற்றும் அன்பு வழியாக அனைத்துச் சமத்துவமற்ற நிலைகளும் அகற்றப்படுவதற்கும் தேவையான உணவு எவருக்கும் குறைவில்லாமல் கிடைப்பதற்காகவும் செபிப்போம், நமது செபங்களை அன்னைமரியா வழியாக அர்ப்பணிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.