2012-07-28 15:16:17

பிலிப்பீன்ஸ் ஆயர்கள் : குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அரசுத்தலைவர் வழங்கும் ஆதரவு தவறாக வழிநடத்தும்


ஜூலை,28,2012. குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் பொறுப்பான பெற்றோர் என்ற மசோதாவுக்கு பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino வெளிப்படையாக ஆதரவு அளிப்பதைக் குறை கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
பிலிப்பீன்ஸ் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள வளங்கள் பற்றாக்குறைப் பிரச்சனை மாணவர்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தால் அப்படியே இருக்கும், இந்தப் பிரச்சனை நீங்குவதற்குப் பொறுப்பான பெற்றோர் குறித்த மசோதா உதவும் என்று கல்வி குறித்து நாட்டுக்கு ஆற்றிய உரையில் அரசுத்தலைவர் Aquino குறிப்பிட்டார்.
இம்மசோதா அங்கீகரிக்கப்பட்டால் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கும், மற்ற இவை சார்ந்த நடவடிக்கைகளுக்கும், 5ம் வகுப்பு தொடங்கி சிறார்க்குப் பாலியல் கல்விப் பாடத்தைச் சொல்லித்தரவும் வழி அமைக்கும் என்று ஆயர்கள் கூறினர்.
அரசுத்தலைவரின் இவ்வுரை குறித்து கருத்து தெரிவித்த San Pablo ஆயர் Leo Murphy Drona, மக்கள் தொகையைக் குறைப்பதற்கு குழந்தைகளையும் கருவில் வளரும் சிசுக்களையும் கொல்வதற்கு எடுக்கும் நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்ற அரசுத்தலைவரின் எண்ணம் நாட்டினரைத் தவறாக வழிநடத்தும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.