2012-07-27 16:40:29

தமிழர் ஒருவருக்கு ரமோன் மகசேசே விருது


ஜூலை,27,2012. இந்தியாவின் தமிழர் ஒருவர் உட்பட ஆறு ஆசியர்களுக்கு, ஆசியாவின் நொபெல் விருது என அழைக்கப்படும் இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருது அளிக்கப்படுவதாக மனிலாவின் மகசேசே விருதுக்குழு இப்புதனன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழைக் கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பணி செய்து வரும் குழந்தை பிரான்சிஸ் என்பவர் ரமோன் மகசேசே விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
65 வயதாகும் பிரான்சிஸ், IVDP என்ற ஒருங்கிணைந்த கிராம முன்னேற்ற வளர்ச்சித் திட்டத்தை 1979ம் ஆண்டு ஆரம்பித்தார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் இந்த IVDP திட்டத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பங்களாதேஷ் வழக்கறிஞர் Syeda Rizwana Hasan, கம்போடிய வேளாண் நிபுணர் Yang Saing Koma, இந்தோனேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் Ambrosius Ruwindrijarto, பிலிப்பீன்ஸ் வேளாண் அறிவியலாளர் Romulo Davide, தாய்வான் காய்கறி விற்பனையாளர் Chen Shu-Chu ஆகியோரும் இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஆறுபேரும் இவ்விருதை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மனிலாவில் பெறுவார்கள்.
முன்னாள் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரமோன் மகசேசேயின் பெயரால் 1958ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்விருதை இதுவரை 49 இந்தியர்கள் உட்பட 290 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் MS சுவாமிநாதன், MS சுப்புலட்சுமி, TN சேஷன், P.Sainath உட்பட 6 பேர் தமிழர்கள்.







All the contents on this site are copyrighted ©.