2012-07-27 16:50:42

சிரியாவில் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்படுமாறு பான் கி மூன் அழைப்பு


ஜூலை,27,2012. Bosnia-Herzegovina குடியரசின் Srebrenica நகரில் 1995ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற படுகொலை நாளை நினைவுகூர்ந்த ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இந்தப் படுகொலை நிகழ்விலிருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சிரியாவில் இடம்பெறும் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Srebrenica நகரில் எட்டாயிரத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இவ்வியாழனன்று நினைவுகூர்ந்த பான் கி மூன், அச்சமயத்தில் அம்மக்களுக்குத் தேவைப்பட்ட ஆதரவை பன்னாட்டுச் சமுதாயம் வழங்கத் தவறியது என்றும் கூறினார்.
இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், இனஒழிப்பு மற்றும் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடையவை ஏற்படும்போது தங்களது நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசுகளின் பொறுப்பு என்பதை, 2005ம் ஆண்டில் உலகத் தலைவர்கள் ஒரு கொள்கையாகவே கொண்டு வந்தார்கள் என்றும் ஐ.நா.பொதுச்செயலர் கூறினார்.
லிபியா, ஐவரி கோஸ்ட் போன்ற சில இடங்களில் இந்தக் கொள்கையைப் பயன்படுத்த முடிந்தது, ஆனால், சிரியா போன்ற பல இடங்களில் பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர் கவலையுடன் கூறினார்.
சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadக்கு எதிராக கடந்த சுமார் 16 மாதங்களாக இடம்பெற்று வரும் கிளர்ச்சியில் பத்தாயிரத்துக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்பதையும் பான் கி மூன் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.