2012-07-27 16:47:22

சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு ஓர் அருள்சகோதரி வலியுறுத்தல்


ஜூலை,27,2012. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு அந்நாட்டின் ஹோம்ஸ் நகருக்கு அருகிலுள்ள Deir Mar Youcoub துறவு இல்லத்தலைவர் அருள்சகோதரி Agnes-Mariam de la Croix கேட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் சிரியாவின் புரட்சியாளர்கள், சிரியா சமுதாயத்தில் குழப்பத்தை விதைத்து நாட்டின் சமநிலையை அழித்து வருகின்றனர் என்றும், பயங்கரவாதம், அச்சுறுத்தல்கள், இரத்தம்சிந்தல்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டைப் பிணையலில் வைத்துள்ளனர் என்றும் அருள்சகோதரி de la Croix குற்றம் சுமத்தினார்.
புரட்சியாளர்களின் நோக்கங்கள் குறித்து மேற்கத்திய ஆதரவாளர்களுக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றுரைத்த அச்சகோதரி, இந்தப் புரட்சியாளர்களில் சிலர், அல்-கெய்தா அல்லது முஸ்லீம் சகோதரத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டமைப்புக் கொண்டவர்கள் என்றும் விளக்கினார்.
கட்டாயத்தின்பேரில் சிரியாவிலிருந்து லெபனன் நாட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்த அச்சகோதரி அரசியல்வாதிகளையும் ஊடகத்துறையினரையும் சந்திப்பதற்காகத் தற்போது உரோமை வந்துள்ளார்.
வெளிநாட்டுச் சக்திகள் சிரியாவின் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதையும், கனரக ஆயுதங்களால் சிரியா ஆக்ரமிக்கப்படுவதற்கு உதவுவதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி de la Croix, சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் ஐ.நா.தீர்மானத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.