2012-07-27 16:28:15

ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதற்கு உதவும் : பேராயர் சுள்ளிக்காட்


ஜூலை,27,2012. ஆயுதங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள், முறையற்றும், பொறுப்பற்றும், சட்டத்துக்குப் புறம்பேயும் கைமாற்றப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையும் பயமும் ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தால் அகலும் என்று கூறினார் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்து நியுயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், இவ்வுலகில், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தம் மிகவும் உறுதியானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதற்குத் திருப்பீடம் சில வழிமுறைகளை வலியுறுத்த விரும்புகிறது என்றும் கூறிய பேராயர் சுள்ளிக்காட், இவ்விவகாரத்தில் அனைத்துலக அளவில் ஒத்துழைப்பையும், நாடுகளுக்கிடையே உதவிகளையும் ஊக்குவித்து அவற்றை வலியுறுத்த வேண்டுமென்று கூறினார்.
நாடுகளுக்கிடையே இடம்பெறும் நெருங்கிய ஒத்துழைப்பு மூலம், உலகில் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதை இவ்வொப்பந்தம் தடை செய்யும், இது உலகில் ஓர் உண்மையான அமைதிக் கலாச்சாரம் ஏற்பட இன்றியமையாதது என்றும் திருப்பீட அதிகாரி பேராயர் சுள்ளிக்காட் ஐ.நா. கூட்டத்தில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.