2012-07-27 16:32:20

ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்திற்கு விரைவில் இசைவு உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்


ஜூலை,27,2012. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்த ஐ.நா. கூட்டம் விரைவில் முடியவுள்ளவேளை, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் விரைவில் ஒரு தீர்மானத்துக்கு வருமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
சண்டைகளின் காரணமாக, 2010ம் ஆண்டின் இறுதியில் சுமார் 2 கோடியே 75 இலட்சம் மக்கள் நாடுகளுக்குள்ளேயே புலம் பெயர்ந்தனர், அதேநேரம், இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடினர், இவற்றுக்குப் பெரும்பாலும் ஆயுதம் தாங்கிய வன்முறைகளும், ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே காரணங்கள் எனவும் அவர் கூறினார்.
ஆறாயிரம் கோடி டாலர் முதல் ஏழாயிரம் கோடி டாலர் வரையிலான மதிப்புடைய ஆயுத வியாபாரம் ஆண்டுதோறும் உலகில் இடம்பெறுகின்றது.
ஆயுதங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதில் உலகில் அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும் அதற்கடுத்தபடியாக சீனாவும் உள்ளன என ஊடகங்கள் கூறுகின்றன.
சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுதங்களால் ஆண்டுதோறும் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்படுகின்றனர் என்று Stockholm அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
நியுயார்க்கில் நடைபெறும் இந்த நான்கு நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.