2012-07-26 15:09:45

பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ள ஒலிம்பிக் சிலுவை


ஜூலை,26,2012. சிலுவையின்றி கிறிஸ்தவ வாழ்வு இல்லை என்பதால், துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிறிஸ்தவர்களின் பங்களிப்பாக ஒலிம்பிக் சிலுவையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவையின் சார்பாக, 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் James Parker கூறினார்.
ஒலிம்பிக் சிலுவையை பல இளையோர் முன்னிலையில் அருள்தந்தை Simon Penhalagan இப்புதனன்று அர்ச்சித்தார்.
இந்தச் சிலுவை, ஒலிம்பிக் போட்டிகளின்போது கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள Joshua முகாம் என்ற இடத்தில் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அங்கு பல ஆன்மீகச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு நீடித்த நினைவாக மக்கள் எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலுவை, Jon Cornwall என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பன்னிருத் திருத்தூதர்களை நினைவுறுத்தும் வண்ணம் இந்தச் சிலுவை பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ளது என்று இதனை வடிவமைத்த கலைஞர் Cornwall கூறினார்.
இந்த ஒலிம்பிக் சிலுவை இலண்டன் நகர போட்டிகள் முடிந்தபின், 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெறும் உலக இளையோர் நாள், 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் உலகக் கால்பந்து போட்டிகள், மற்றும் 2014ம் ஆண்டு இரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.