2012-07-26 15:05:09

ஏழைகளை மதிப்புடன் வாழவைப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை - அமெரிக்க ஆயர்


ஜூலை,26,2012. அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மத்தியில் தங்கள் சக்தியைப் பயன்படுத்த முடியாத நிலையில் வாழும் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
செல்வம் மிகுந்தவர்கள் செலுத்தவேண்டிய வரித் தொகையைக் குறைக்கும் முயற்சிகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியால், வறியோருக்குக் கிடைக்கவேண்டிய பல உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற கவலையில், அமெரிக்க ஆயர் பேரவையின் மனித முன்னேற்றம், உள்நாட்டு நீதி என்ற பணிக்குழுவின் தலைவரான ஆயர் Stephen Blaire தன் கவலையை வெளியிட்டு பிரதிநிதிகளுக்கு இப்புதனன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் வறியோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவருகிறது என்றும், தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 4 கோடியே, 60 இலட்சம் வறியோர் உள்ளனர், இவர்களில் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் உள்ளனர் என்று ஆயர் Blaire சுட்டிக் காட்டினார்.
செல்வந்தர்களின் வரித்தொகையைக் குறைக்கும்போது, அரசின் நிதி பற்றாக்குறை அதிகமாகும், இதனால் வறியோர் மதிப்புடன் வாழும் பல திட்டங்கள் நீக்கப்படும் என்று ஆயர் Blaire தன் கவலையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.