2012-07-25 14:02:33

திருஅவையில் திருப்புமுனைகள் – கைம்பெண்களின் பாதுகாவலர் புனித பிரிஜித்


ஜூலை,25,2012. “அரசியலில் இருப்பவர்கள் நற்செய்தி அறிவுரைகளின்படி வாழ்ந்தால் இந்த உலகத்தில் அமைதி இருக்கும்”. இன்றைய குழப்பங்கள் நிறைந்த அரசியலில் ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கு நல்லதொரு வழியைச் சொன்னவர் புனித பிரிஜித். மத்தேயு நற்செய்தி 5,6,7 ஆகிய பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் மலைப்பொழிவு அறிவுரைகளே அரசியல் தலைவர்களுக்குப் போதுமானது. இப்புதன்கிழமையன்று இந்தியாவின் 13வது குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுக்கொண்ட பிரணாப் முகர்ஜியும், ஏழைகளும் நாட்டின் அங்கம் என உணர்ந்து செயல்படுவேன், இந்திய அரசியல் சாசனத்தை காக்க உறுதி பூண்டிருக்கிறேன், நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன், பயங்கரவாதத்தை ஒழிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். 14ம் நூற்றாண்டில் திருஅவை வாழ்வில் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்விலும் ஒரு திருப்பத்தைக் கொணர்ந்தவர் புனித பிரிஜித். அக்காலத்தில் மனமாறத் தவறியத் திருத்தந்தையர்களைக்கூடத் துணிவுடன் சாடியவர் பிரிஜித். திருமண வாழ்வைத் துறந்து சந்நியாச வாழ்வு வாழ்பவர்கள்தான் புனிதர்கள் ஆக முடியும் என்று யாரும் நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்ற வைக்கின்றது புனித பிரிஜித்தின் வாழ்வு. இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள், அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்வுகள் போன்ற விவிலிய நிகழ்வுகளை இவர் பலமுறை காட்சிகளில் கண்டிருக்கிறார். இந்தக் காட்சிகள் கிறிஸ்தவ கலைஞர்களுக்கு விவிலியத் தலைப்புக்களில் ஓவியங்கள் வரைய உதவியிருக்கின்றன. இவரது ஆழ்ந்த பக்தியும் பொதுமக்கள் மத்தியில் பக்தி வாழ்வைத் தூண்டின. ஆயினும் பிரிஜித் புனிதர் என இன்று உயர்ந்து நிற்பதற்கு அவர் செய்த பிறரன்புச் செயல்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
சுவீடன் நாட்டின் Finistaவில் பக்தியுள்ள கிறிஸ்தவப் பெற்றோருக்கு 1303ம் ஆண்டு பிறந்தவர் புனித பிரிஜித். இவரது தந்தை Birger Persson என்பவர் Uppland மாநில ஆளுனராகவும், சுவீடன் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருந்தவர். பிரிஜித் சிறுமியாக இருந்த போதே நம் ஆண்டவர் இயேசு சிறப்பு அருள்வரங்களால் அவளை நிறைத்தார். பிரிஜித்துக்கு ஏழு வயது நடந்த போதே சிலுவையில் அறையுண்டு துன்புற்ற கிறிஸ்து பலமுறை காட்சி கொடுத்திருக்கிறார். இதுவே இயேசு மீது இவள் தீவிர பக்தி கொள்ளக் காரணமாக அமைந்தது. இறையுண்மைகளை அசாதாரண முறையில் புரிந்து கொண்டார். பிரிஜித்துக்கு 13 வயது நடந்த போது, 18 வயதான இளவரசர் Ulf Gudmarsson என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார் . இத்தம்பதியர் 28 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்வை நடத்தினர். பிரிஜித் தனது எடுத்துக்காட்டான வாழ்வால் தனது கணவரும் பக்தியில் நிறைந்து தூய வாழ்வு வாழத் தூண்டினார். இந்தத் தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் ஒருவரான கத்ரீனும் புனிதராவார். இவர் சுவீடன் நாட்டு புனித கத்ரீன் என அழைக்கப்படுகிறார். பிரிஜித்தின் பக்தி வாழ்வு பெரும் இறையியலாளர்களையும் அரசர்களையும் இவர் பக்கம் ஈர்த்தது. இதனால் பிரிஜித்தின் புகழும் பரவியது.
1340ம் ஆண்டில் இவர்களின் இளைய மகன் இறந்து விடவே, பிரிஜித்தும் அவரது கணவரும் இஸ்பெயின் நாட்டு Santiago de Compostella புனித யாகப்பர் திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டனர். ஜூலை 25 இப்புதன் இயேசுவின் திருத்தூதரான புனித யாகப்பரின் விழாவாகும். இப்புனிதரின் திருத்தலத்துக்கான இத்திருப்பயணத்தை முடித்து இவர்கள் திரும்பும் வழியில் பிரிஜித்தின் கணவர் Ulfன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே விரைவில் சுவீடன் திரும்பினர். திரும்பும் வழியில் Ulf Cistercian துறவு மடத்திற்குச் சென்றார். அங்கேயே தனது 46வது வயதில் இறந்தார். பிரிஜித் தனது 41வது வயதில் விதவையானார். எனினும் அவர் தொடர்ந்து தனது ஊரிலே வாழ்ந்தாலும் புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து செபத்திலும் தபத்திலும் நாள்களைச் செலவழித்தார். இந்த நாள்களில் பிரிஜித்துக்கு இயேசு அடிக்கடி காட்சி கொடுத்தார். காட்சிகளும் நீண்ட நேரம் நீடித்தன. இவை ஒருவேளை சாத்தானிடமிருந்து வருகின்றனவோ என்றுகூட பிரிஜித் நினைத்தார். எனினும், இவை சாத்தானுடவையல்ல என்பதை இயேசு உறுதிப்படுத்தினார். அத்துடன் பிரிஜித் தனது மணவாட்டியாகவும் தனது பேச்சாளராகவும் ஆக வேண்டுமெனவும் இயேசு கேட்டுக் கொண்டார். இந்தக் காட்சியில் ஒருமுறை பிரிஜித் ஒரு துறவற சபையைத் தொடங்க வேண்டுமென்ற இறைவனின் குரலைக் கேட்டார். அச்சபைக்குரிய சட்டதிட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும்கூட இறைவன் விளக்கமாகச் சொன்னார். எனவே பிரிஜித், ஆண்களுக்கும் பெண்களுக்குமென Vadstenaவில் இரண்டு துறவு இல்லங்களைத் தொடங்கினார். இது புனித மீட்பர் சபை அல்லது Bridgettines என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் துறவு இல்லத்துக்கு மன்னர் Magnusம் அரசியும் மிகுந்த தாராளத்தோடு ஆதரவளித்தனர். பிரிஜித்தும், தனக்குத் தமது கணவர் கொடையாய்க் கொடுத்திருந்த நிலங்களையும் கட்டிடங்களையும் வைத்து துறவு இல்லத்தைக் கட்டினார். தனக்குக் கிடைக்கும் உதவிகளில் மீதப்படும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அவர்களின் படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டார்.
திருத்தந்தையர்கள் பிரான்ஸ் நாட்டு Avignonலிருந்து உரோமைக்குத் திரும்பி வராமல் இருந்ததை கிறிஸ்து பிரிஜித் வழியாகக் கண்டித்தார். திருத்தந்தை 6ம் கிளமெண்ட்(1342-52) தனது மனதை மாற்றத் தவறுகிறார் என்று சொல்லி அவரை “ஆன்மாக்களை அழிப்பவர், Lucifer என்ற தலைமைச் சாத்தானைவிட மோசமானவர், பிலாத்துவைவிட அதிகமாகவே நீதியற்றவர், யூதாஸ் இஸ்காரியோத்தைவிட இரக்கமற்றவர்” என்றெல்லாம் சொல்லிக் கடிந்து கொண்டவர் பிரிஜித். திருத்தந்தையர்கள் 6ம் இன்னோசென்ட், 5ம் உர்பான், 11ம் கிரகரி ஆகியோருக்குப் பல செய்திகளை அனுப்பியிருக்கிறார். அந்த அளவுக்கு பிரிஜித் தவறைத் தட்டிக் கேட்பதில் துணிச்சலானவர். அக்காலத்தில் திருஅவையில் இடம்பெற்ற ஊழல்களையும் அச்சமின்றித் தட்டிக் கேட்டார். கி.பி.1350ம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் கொள்ளை நோய் பரவியிருந்தது. எனினும் பிரிஜித் துணிவோடு உரோமையில் நடைபெற்ற ஜூபிலி ஆண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடவுளால் வழிநடத்தப்பட்ட பிரிஜித் 1371ம் ஆண்டில் தனது மகள் கத்ரீன், இரண்டு மகன்கள் இன்னும்பிற திருப்பயணிகளோடு புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் நேப்பிள்ஸ் நகரில் அவரது மகன் சார்லஸ் இறந்தார். மேலும் அவர்களது கப்பலும் சேதமடைந்தது. எனினும் பிரிஜித் அசாதாரண வரங்களால் நிறைந்திருந்ததால் புனிதபூமித் திருப்பயணத்தை அக்குழுவினர் தொடர்ந்தனர்.
புனித பூமியில் இயேசுவின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை அவை நடந்த இடங்களிலே காட்சியில் கண்டார் பிரிஜித். சைப்ரஸ் மற்றும் நேப்பிள்ஸ் மக்களின் தாறுமாறான வாழ்வைக் கண்டித்தார். புனித பூமியிலிருந்து உரோமைக்குத் திரும்பினார். அங்கு உடல்நலம் குன்றியது. 1373ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியன்று தனது 71வது வயதில் உரோமையில் இறைவனடி சேர்ந்தார். இவரது உடலை சுவீடன் துறவு இல்லத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். 1391ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் Boniface பிரிஜித்துக்குப் புனிதர் பட்டமளித்தார். பிரிஜித், சுவீடன் நாட்டுக்கும் கைம்பெண்களுக்கும் பாதுகாவலி. ஐரோப்பாவின் இணைப் பாதுகாவலி. புனித சியன்னா கத்ரீன் மற்றும் புனித Teresa Benedicta (எடித் ஸ்டெய்ன்)வுடன் புனித பிரிஜித்தும் ஐரோப்பாவின் இணைப் பாதுகாவலியாவார். இதனை 1999ம் ஆண்டில் அறிவித்தார் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால்.
செல்வந்தர்களாக இருக்கும் இல்லறத்தாரும் புனிதராகலாம், யாரும் எந்த நிலையிலும் இறைவனோடு ஒன்றித்திருக்கலாம் என்பதற்கு புனித பிரிஜித் ஓர் எடுத்துக்காட்டு. இவர் தனது வாழ்வில் எதிர்கொண்ட எல்லாவிதத் துயரங்களையும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஏற்றுக் கொண்டார். இவர் தான் கண்ட இறைக்காட்சிகளில் கடவுள் தமக்கு வெளிப்படுத்தியதை எழுதி வைத்திருக்கிறார். அவ்வெளிப்பாடுகளில் ஒருசில ...
"நீ உனது வேலையிலும் நோயிலும் ஏற்படும் சுமை குறித்தும் துன்பம் குறித்தும் கலங்கினால், நீ நரகத்திற்குப் போவது எவ்வளவு பெரிய சுமையாக இருக்கும். நீ உனது எல்லா உறுப்புக்களாலும் பாவம் செய்திருந்தால் ஒவ்வொரு உறுப்பினாலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். நீ மனம் வருந்துவதற்கு நல்ல மனது காட்டுவதால் நான் எனது நீதியை இரக்கமாக மாற்றுவேன். ஆயினும் கொஞ்சம் வேதனைகளையும் தண்டனையாகக் கொடுப்பேன்”
“உன்னைப் படைத்து நீ வைத்திருக்கும் அனைத்து நல்ல பொருள்களையும் அளித்த உனது இறைவனை மதித்துநட. இவ்வுலகில் எதுவும் இறைவனின்றி உண்டாக்கப்படவில்லை மற்றும் இறைவனின்றி உண்டாக்கப்படவும் முடியாது என்பதை நீ உண்மையாகவே நம்ப வேண்டும். நியாயமான வேலையை அன்பு செய்யவும், அனைத்துப் பொருள்களிலும் நீ தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளவும் உன்னை அழைக்கிறேன். ஏனெனில் உலகம் மனிதருக்காகப் படைக்கப்பட்டது. மனிதர் தங்களது அதிகப்படியானத் தேவைகளுக்காக அல்லாமல், தங்களது நியாயமானத் தேவைகளுக்காக படைப்புப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இறைவன் உலகைப் படைத்திருக்கிறார். இந்த உணர்வுகளை ஏற்படுத்தும் தூய ஆவியை நீ கண்டுணர வேண்டும். அதேசமயம், உனது சொந்தப் புகழில் ஆசை வைக்கவும், உனக்கு அளிக்கப்பட்ட பொருள்களில் பெருமை கொள்ளவும் நீ தூண்டப்பட்டால் அது தீய ஆவியின் வேலை என்பதை உணர்ந்து கொள். சில சமயங்களில் தீய ஆவி தூய ஆவி போன்ற சோதனைகளைக் கொடுக்கும். ஆதலால் எப்போதும் நீ உனது மனச்சான்றைப் பரிசோதனை செய். அவற்றை ஞானம் நிறைந்த ஆன்மீகமனிதரிடம் தெரிவி. எனவே பிரிஜித், உனது இதயம் இறைவனுக்காக ஏங்கினால், உனது இதயம் அவர்மீதுள்ள அன்பால் பற்றி எரிந்தால் அது இறைவனின் தூய ஆவியின் வேலை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்”.
அன்பர்களே நமது வாழ்க்கையையும் இறைவனை மையமாக வைத்து வாழ்வோம். அப்போது எந்தக் கவலைகளும் துன்பங்களும் நெருக்கடிகளும் நம்மை வீழ்த்தாது. மாறாக அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கு இறைவனின் அருளைப் பெறுவோம்.







All the contents on this site are copyrighted ©.