உலகுசார் துறவு சபைகளின் அனைத்துலக மாநாட்டுக்குத் திருத்தந்தை வாழ்த்து
ஜூலை,24,2012. உலகுசார் துறவு சபையினர், உலகு மற்றும் திருஅவையின் காயங்களை அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு,
குறிப்பாக நட்புணர்வு மற்றும் மன்னிக்கும் திறனோடு, முழுமையான மற்றும் மகிழ்வான வாழ்வு
வாழுமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலியின் அசிசி நகரில் நடைபெற்று
வரும் உலகுசார் துறவு சபைகளின் அனைத்துலக மாநாட்டுக்குத் திருத்தந்தையின் பெயரில் செய்தி
அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, இச்சபைகளுக்குத்
திருத்தந்தை கூறும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தூயஆவி புதியனவற்றைக் கட்டி
எழுப்புவதால் இச்சபைகளைச் சேர்ந்தவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக வாழுமாறும் கேட்டுக்
கொண்டுள்ள திருத்தந்தை, இவர்கள் மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார். இறைவனே
தங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறார் என்பதைக் கண்டு கொண்ட இவர்கள் தங்களது வாழ்வை முழுமையாக
அவருக்குக் கொடுக்க வேண்டும் எனவும், ஆன்மீக வாழ்க்கையிலும் துறவறப் பயிற்சியிலும் கவனம்
செலுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் திருத்தந்தை. இந்த மூன்று நாள் அனைத்துலக மாநாடு,
இப்புதன்கிழமையன்று நிறைவடையும். அதன்பின்னர் அச்சபைகளின் பொதுப் பேரவையும் நடைபெறும்