2012-07-23 15:26:59

திருத்தந்தை : தீயவன் இறைவனின் அமைதியை எப்போதும் சீர்குலைக்கிறான்


ஜூலை,23,2012. மனித இதயங்களிலும், உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையேயும், மனிதருக்கும் இறைவனுக்கும் இடையேயும், மனிதர்களுக்கிடையேயான உறவுகளிலும், சமூக மற்றும் அனைத்துலக உறவுகளுக்கு இடையேயும், மனிதருக்கும் படைப்புக்கும் இடையேயும்கூட தீயவன் பிரிவினைகளை விதைத்து இறைவனின் வேலையை எப்போதும் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறான் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோ பாப்பிறை கோடை விடுமுறை வளாகத்தின் முன்னர் கூடியிருந்த மூவாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இயேசு மரிய மகதலாவிடமிருந்து ஏழு பேய்களை விரட்டிய நற்செய்திப் பகுதியைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, தீயவன் சண்டையை விதைக்கிறான், இறைவன் அமைதியை உருவாக்குகிறார் என்று கூறினார்.
மேலும், இஞ்ஞாயிறு இறைவார்த்தை, அடிப்படையான மற்றும் எப்போதும் கவர்கின்ற விவிலியக் கருப்பொருள் குறித்து நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இறைவன் மனித சமுதாயத்தின் ஆயர்; அதாவது இறைவன் நமக்கு வாழ்வளிக்கவும், நாம் உண்டு ஓய்வெடுக்க உதவும் நல்ல மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச் செல்லவும் விரும்புகிறார், நாம் தவறி விடவும் இறக்கவும் அவர் விரும்பவில்லை, நம்வாழ்வின் நிறைவான நமது பயணத்தின் இலக்கை நாம் அடைய அவர் விரும்புகிறார், இதுவே ஒவ்வொரு தந்தையும் தாயும் தங்களது பிள்ளைகளுக்கு விரும்புவார்கள், நன்மைத்தனம், மகிழ்ச்சி மற்றும் நிறைவையே விரும்புவார்கள் என்றும் கூறினார்.
இயேசு வழியாக இறைவன் நடத்தும் ஆழமானக் குணப்படுத்தல், உண்மை, முழு அமைதி, ஒருவர் தன்னோடும் பிறரோடும், இறைவனோடும், உலகோடும் கொள்ளும் ஒப்புரவின் கனி ஆகியவற்றில் இருக்கின்றது என்பதை மரிய மகதலா குறித்த நிகழ்வு விளக்குகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தீயவன் செய்ய முயற்சிப்பதற்கு எதிரானது என்றுரைத்த திருத்தந்தை, இந்த ஒப்புரவை அடைவதற்கு நல்ல ஆயராம் இயேசு உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாக மாறினார் என்று கூறினார்.
“உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்” என்று திருப்பாடல் 23,6ல் சொல்லப்பட்டுள்ள வியத்தகு வாக்குறுதியை இவ்வாறு அவர் நிறைவேற்றினார் என்றும் திருத்தந்தை மூவேளை செப உரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.