2012-07-21 15:39:34

பணமும் அதன் ஒளிவுமறைவின்மையும் குறித்த அருள்தந்தை லொம்பார்தியின் கருத்து


ஜூலை,21,2012. பொருளாதார மற்றும் நிதித்துறைகளில் உருவாகியுள்ள புதியவகைக் குற்றங்களைக் கட்டுப்படுத்தி அதற்கு எதிராய் நடவடிக்கை எடுக்கும் உலகளாவிய அமைப்பில் வத்திக்கான் இணைந்துள்ளது ஒரு நல்ல முயற்சி எனவும் இது உலகளாவியத் திருஅவைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய் இருக்கும் எனத் தான் நம்புவதாகவும் வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு உரைத்த அதன் இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, ஐரோப்பிய அவையின் ஓர் அங்கமான Moneyval என்ற அமைப்பு, வத்திக்கானின் பணப்பரிமாற்ற நிலவரம் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை குறித்துப் பேசினார்.
வத்திக்கான் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன என்ற அவ்வமைப்பின் அறிக்கை குறித்துப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, திருஅவை நிறுவனங்களும் இந்த ஆய்வுப்பாதையில் தங்களைத் தாழ்மையுடன் உட்படுத்துவது சரியானதும், தகுந்ததுமாகவும் இருக்கும் என்றும் பரிந்துரைத்தார்.
பொருளாதார மற்றும் நிதித்துறைகளில் உருவாகியுள்ள புதியவகைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களைவிட தாங்கள் மிகவும் திறமைசாலிகள் என்று நினைக்க முடியாது, ஏனெனில் மக்கள்மீது நல்ல எண்ணங்களுடன் வைக்கப்படும் நம்பிக்கை, சிலவேளைகளில் அவர்கள் அந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் விதத்தில் நடந்து கொள்வதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.