2012-07-21 15:34:37

டென்வர் திரையரங்குத் துப்பாக்கிச்சூடு நிகழ்வில் வருந்தும் சமூகத்தினருடன் ஆயர்கள் ஒருமைப்பாட்டுணர்வு


ஜூலை,21,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகர் திரையரங்கு ஒன்றில் இவ்வெள்ளி நள்ளிரவுக் காட்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் செபங்களையும் செய்திகளையும் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
டென்வர் நகரின் Aurora புறநகர்ப் பகுதியிலுள்ள நூற்றாண்டுத் திரையரங்கில் “The Dark Knight Rises” என்ற திரைப்படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தநேரத்தில், நள்ளிரவு 12.30 மணிக்கு 24 வயதுடைய James Holmes என்ற மனிதர் முகமூடியுடன் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வன்முறை நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்ட டென்வர் பேராயர் Samuel J. Aquila மற்றும் துணை ஆயர் James D. Conley, இந்நிகழ்ச்சி தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும், அழுவாரோடு தாங்கள் அழுவதாகவும், இதைச் செய்த குற்றவாளியின் மனமாற்றத்திற்காகத் தாங்கள் செபிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்தக் குற்றவாளியின் இதயத்தைக் கடந்த இரவில் தீமை ஆட்சி செய்தது, இத்தகைய தீமையின் இருளை இயேசு கிறிஸ்துவால் மட்டுமே வெல்ல முடியும் என்றும் ஆயர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அதிபர் ஒபாமா ஆணையிட்டுள்ளார்.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி James Holmes, கடந்த அறுபது நாள்களில் நான்குத் துப்பாக்கிகளையும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகளையும் வாங்கியிருக்கிறார் என்று Aurora காவல்துறை கூறியுள்ளது.
இந்தத் திரையரங்கு துப்பாக்கிச்சூடு நிகழ்வு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் நடைபெற்றுள்ள மிகக் கொடூரமான நிகழ்வு என்று சொல்லப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.