2012-07-21 15:36:10

ஐரோப்பிய ஆயர்கள் : சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தாமதிக்க வேண்டாம்


ஜூலை,21,2012. உரையாடல் இடம்பெற வேண்டிய இடத்தை ஆயுதங்கள் ஆக்ரமித்துள்ள சிரியாவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக ஐரோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவின் நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு, வன்முறையில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்களுக்கிடையேயான பகையுணர்வுகளையும் ஆயுதங்களையும் கைவிட்டு உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு இறைவன் வழிசெய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது.
சண்டை எப்பொழுதும் தவிர்க்க முடியாத வேதனைகளையும் அழிவையும் கடும் பின்விளைவுகளையுமே நாட்டிற்குக் கொண்டுவரும் எனக் கூறும் அவ்வறிக்கை, வருகிற சில நாள்கள் சிரியா குறித்து ஓர் அறுதியான தீர்மானம் எடுப்பதற்கு முக்கியமான நாள்கள் என்பதால் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் அந்நாட்டுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளது.
இவ்வறிக்கையில் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் Péter ErdőArchbishop, உதவித் தலைவர் ஜெனோவா பேராயர் கர்தினால் Angelo Bagnasco, Przemyśl பேராயர் Józef Michalik ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.