2012-07-20 16:09:10

உலகில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 இலட்சமாக அதிகரிப்பு


ஜூலை,20,2012. உணவுப் பாதுகாப்பின்மை, உள்நாட்டுச் சண்டைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்ற காரணங்களால் உலகில் தற்போது ஏறக்குறைய 6 கோடியே 20 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வாண்டின் முதல் பாதிப் பகுதியில் இருபது நாடுகளில் அவசர உதவிகள் தேவைப்படும் மக்களைக் காண முடிந்ததாகத் தெரிவித்தார் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண உதவி அமைப்பின் நேரடிப் பொதுச் செயலர் Valerie Amos.
உதவிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் பாதிப் பகுதியில் 5 கோடியே 10 இலட்சத்திலிருந்து 6 கோடியே 20 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் ஆமோஸ் தெரிவித்தார்.
சாட், மாலி, மவ்ரித்தானியா, நைஜர், சூடானின் ஒரு பகுதி உள்ளிட்ட ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதி, காமரூன், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மக்களில் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
ஏமன் நாட்டில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 60 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும், ஆப்கானிஸ்தானில் இவ்வாண்டில் இதுவரை ஏற்பட்டுள்ள சுமார் 300 இயற்கைப் பேரிடர்களால் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.அதிகாரி ஆமோஸ் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.