2012-07-20 16:06:36

அல்பேனியாவில் இசுலாமின் கண்டிப்பான வழிமுறைகள் பரப்பப்பட்டு வருவது பதட்டநிலையை உருவாக்குகின்றது – கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கவலை


ஜூலை,20,2012. அல்பேனியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இசுலாம் மத வழிமுறைகளிலிருந்து வேறுபட்ட முறையை மற்ற நாடுகள் பரப்பி வருவது, அல்பேனியாவில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மத்தியில் பதட்டநிலைகள் உருவாகக் காரணமாகியுள்ளன என்று கத்தோலிக்கப் பிறரன்புப் பணியாளர் Peter Rettig குறை கூறினார்.
துருக்கி மற்றும் சவுதி அரேபியாவில் பயிற்சி பெற்ற இளம் இசுலாம் குருக்கள் அல்பேனியாவில் இசுலாமியப் பள்ளிகள் கட்டப்படுவதைத் தீவிரமாக ஊக்குவித்து வருவதாகவும், இது பொதுமக்கள் மத்தியில் பதட்டநிலைகளை உருவாக்குவதாகவும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் தென்கிழக்கு ஐரோப்பா பிரிவின் தலைவர் Rettig கூறினார்.
அல்பேனியாவின் மற்ற பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்ட Rettig, அந்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஊழல், சொத்துரிமை பிரச்சனைகள் போன்றவை அந்நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று கூறினார்.
அல்பேனியாவின் சுமார் 32 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் சுன்னி இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். 8 விழுக்காட்டினர் இசுலாமிய சூஃபிசம் போன்ற Bektashi மதத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் சுமார் 20 விழுக்காடும், கத்தோலிக்கர் 10 விழுக்காடும் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.