2012-07-19 16:26:02

சிரியாவில், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இடமே இல்லாத அளவு ஆயுதங்களின் ஒலி பெருகிவிட்டது – பேராயர் Nassar


ஜூலை,19,2012. மதியற்ற வன்முறைகளில் மூழ்கிப்போயிருக்கும் சிரியாவில், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இடமே இல்லாத அளவு ஆயுதங்களின் ஒலி பெருகிவிட்டது என்று தமாஸ்கு நகர் Maronite ரீதிப் பேராயர் Samir Nassar, கூறினார்.
கடந்த ஞாயிறு முதல் சிரியாவின் தலைநகரில் ஆயுதம் தாங்கியப் போர் அளவுக்குமீறி நிகழ்வதால், அப்பாவி பொதுமக்கள் புகலிடம் ஏதுமின்றி தவிக்கின்றனர் என்று பேராயர் Nassar, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் வருத்தத்துடன் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் அதிக அளவு ஆள்கடத்தல் விடயங்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு குடும்பமும் வெளியில் செல்லஇயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும், கடத்தப்பட்ட தங்கள் உறவுகளை மீட்க, மக்கள் உறவினர்களிடம் இருந்து நிதிகள் பெற்று குடும்பத்தவரை மீட்கவேண்டியக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.
1860ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக, துருக்கியர்கள் மேற்கொண்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளான Francesco, Abdel-Mooti, Raffaele Massabki, என்ற மூன்று சகோதரர்களின் திருநாளை ஜூலை 10ம் தேதி கொண்டாடியதைப் பற்றி எடுத்துரைத்த பேராயர் Nassar, தற்போதைய வன்முறைகளிலும் இம்மறைசாட்சிகளின் பரிந்துரையை நாடி மக்கள் வேண்டி வருகின்றனர் என்று கூறினார்.
பேராயரின் இந்த பேட்டிக்குப் பின் தமாஸ்கு நகரில் நடைபெற்ற ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலில் சிரிய அரசுத் தலைவர் Bashar Assadன் உறவினரும், உளவுத்துறை அமைச்சருமான Assef Shawkat, பாதுகாப்புத் துறை அமைச்சர் Dawoud Rajha, உட்பட சில முக்கிய அரசுத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் Dawoud Rajha, சிரியாவின் அமைச்சரவையில் உயர்ந்ததோர் இடம் வகித்த ஒரே கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.