2012-07-18 16:14:32

லெபனான் நாட்டிற்குத் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியா நாட்டில் அமைதி நிலவ ஒரு முக்கிய வழியாக அமையும் - முதுபெரும் தலைவர்


ஜூலை,18,2012. செப்டம்பர் மாதம் லெபனான் நாட்டிற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியா நாட்டில் அமைதி நிலவ ஒரு முக்கிய வழியாக அமைவதற்கு அனைத்து கிறிஸ்தவர்களும் செபிக்கவேண்டும் என்று கிரேக்க, மெல்கத்திய முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரி இலகாம் கூறினார்.
சிரியாவின் தலைநகர் தமாஸ்குவில் இஞ்ஞாயிறு முதல் தொடர்ந்துவரும் தாக்குதல்களைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரி இலகாம் இவ்வாறு கூறினார்.
ஒப்புரவு, சமாதானம் ஆகிய சொற்கள் இன்றைய உலகில் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு என்று முதுபெரும் தலைவர் கூறினார்.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் மதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய முதுபெரும் தலைவர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால், எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய ஒரு சமுதாயமாகவும் உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.
பல நாடுகளிலிருந்தும் ஆயுதங்கள் அனுப்பப்படுவதே, சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை இந்த அளவு வளர்த்துவிட்டது என்று கிரேக்க, மெல்கத்திய முதுபெரும் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.