2012-07-18 16:32:00

நெல்சன் மண்டேலாவின் 94வது பிறந்த நாள் விழாவில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன்


ஜூலை,18,2012. இப்புதன் காலை எட்டு மணியளவில் தென் ஆப்ரிக்காவில் உள்ள 1 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் ஒரே நேரத்தில் 'Happy Birthday' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இணைந்து பாடினர். அதே நேரம், தென் ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் உள்ள பல இலட்சம் மக்களும் குழந்தைகளுடன் இவ்வாழ்த்துப் பாடலில் இணைந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா, இன்று தனது 94வது பிறந்த நாளை கொண்டாடினார். தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக போராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைவாழ்வை மேற்கொண்டவர் நெல்சன் மண்டேலா. விடுதலைக்குப் பின்பு தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்ரிக்காவின் அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார்.
அவர் தனது 94வது பிறந்த நாளை குயன்னூ என்ற தனது கிராமத்தில் உள்ள வீட்டில் இன்று கொண்டாடினார். அப்போது இவரது குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையினர் கலந்து கொண்டனர்.
மேலும், இவ்விழாவில் அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன் எந்த முன் அறிவிப்புமின்றி திடீரென கலந்து கொண்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விழாவில் பங்கேற்ற மண்டேலா நீண்ட இடைவெளிக்குப்பின் பொது மக்கள் முன்பு தோன்றியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.