2012-07-18 16:20:07

ஆயர் Ma Daqin மீது சீன அரசு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க வேண்டுமென்று கத்தோலிக்கர்கள் செபம்


ஜூலை,18,2012. மதநம்பிக்கையற்ற சீன அரசு கத்தோலிக்கத் திருஅவையின் விடயங்களில் தலையிடுவது தவறு என்று ஹாங் காங் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Zen கூறினார்.
திருப்பீடத்தின் அங்கீகாரத்துடன் Shanghai உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்ட ஆயர் Thaddeus Ma Daqin, தன் ஆயர் பணிகளை ஆற்றக்கூடாது என்று சீன அரசு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க வேண்டுமென்ற வேண்டுதலை எழுப்ப இத்திங்களன்று கத்தோலிக்கர்கள் ஹாங்காங்கில் உள்ள புனித மார்கரெட் கோவிலில் கூடிவந்தனர்.
ஏறத்தாழ ஆயிரம் பேர் கூடிவந்திருந்த அத்திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Zen, அரசின் தலையீடு குறித்தும், அரசின் போக்கிற்கு இணங்கிச்செல்லும் மதத் தலைவர்கள் சிலரின் தவறைக் குறித்தும் பேசினார்.
இத்திருப்பலிக்கு முன்னர், நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் சீனா ஹாங்காங் நல்லுறவு அலுவலகத்திற்கு முன்னர் செபமாலை செபித்தனர்.
சீன அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயர் Ma Daqin, மற்றும் ஏனைய குருக்கள், துறவியர் அனைவரும் சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டுமென்றும், கத்தோலிக்கத் திருஅவைக்கும், சீன அரசுக்கும் இடையே நல்லுறவு வளர வேண்டுமென்றும் செபமாலை நேரத்திலும், திருப்பலியிலும் சிறப்பான செபங்கள் எழுப்பப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.