2012-07-18 16:10:00

MONEYVAL அறிக்கை குறித்த வத்திக்கான் நிலைப்பாடு


ஜூலை18,2012. பணப்பரிமாற்றம் குறித்து MONEYVAL என்ற ஐரோப்பிய வல்லுனர்கள் குழு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு இயைந்த வகையில் திருப்பீடமும் திட்டங்களை வகுத்து, செயல்பட்டு வருவதாக இப்புதனன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் நேரடிச்செயலர் பேரருட்திரு Ettore Balestrero.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பணப் பரிமாற்றம் செய்யப்படுவது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வது போன்றவை குறித்து தனது உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் MONEYVAL என்ற மதிப்பீட்டு வல்லுனர் குழு, ஐரோப்பிய அவையின் ஓர் அங்கமாகும். 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த குழுவின் மதிப்பீட்டின்கீழ் 28 நாடுகள் உள்ளன. இந்த மதிப்பீட்டுக் குழுவில் இஸ்ரேலும் இணைவதாகக் கேட்டுக் கொண்டதன்பேரில் 2006ம் ஆண்டில் இஸ்ரேலும் இணைக்கப்பட்டது.
இந்த MONEYVAL குழு, திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணப்பரிமாற்றம் குறித்து மதிப்பீடு செய்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேரருட்திரு Balestrero, இவ்வாறு மதிப்பீடு செய்யுமாறு 2011ம் ஆண்டு பிப்ரவரியிலே MONEYVAL வல்லுனர்களிடம் திருப்பீடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
திருப்பீடம் தன்னை இவ்வாறு மதிப்பீடு செய்வதற்கு முதலில் அதற்கு அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
பணப்பரிமாற்றங்களுக்கு எதிரான தற்காலிகத் தீர்வுகளை விட்டு விலகி நீண்டகாலத் தீர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் திருப்பீடம், ஐ.நா.பாதுகாப்பு அவை எதிர்நோக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், நிதித்துறை உளவு அமைப்புகளோடு தகவல் பரிமாற்றங்களைக் கொள்ளவும், நிதிப் பரிமாற்றக் கண்காணிப்பு விதிகளைக் கைக்கொள்ளவும், அனைத்துலக விதிமுறைகளுக்கு இயைந்த வகையில் குற்றவியல் சட்டங்களைத் திருத்தியமைக்கவும், குற்றங்களை எதிர்த்துப் போரிடும் இலாப நோக்கமில்லாத குழுக்களின் விதிமுறைகளையும் சட்டங்களையும் ஏற்கவும் தன்னைத் தயாரித்து செயல்படுத்த முனைந்து வருவதாக பேரருட்திரு Balestrero நிருபர்களிடம் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.