2012-07-17 15:41:15

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 131


RealAudioMP3 மறையுரைகள் வழங்குவதில் புகழ்பெற்ற ஒருவர், பெருநகர் கோவில் ஒன்றில் ஞாயிறு வழிபாடுகளை நடத்தினார். வாழ்வில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால் எதையும் சாதிக்கப் போவதில்லை. அவ்வப்போது நமது ஓட்டத்தை நிறுத்துவோம். எவ்விதம் இளைப்பாறுவது, நிம்மதி அடைவது என்பவற்றைக் கற்றுக் கொள்வோம் என்று அவர் மறையுரையாற்றினார். அவர் சொன்னது கோவிலில் இருந்த அனைவரின் மனதையும் தொட்டது.
வழக்கமாக, அந்தக் கோவிலுக்கு வருபவர்கள் வழிபாடு முடிந்ததும் அவசர, அவசரமாக அவரவர் கார்களில் ஏறி வீட்டுக்கு விரைவது வழக்கம். அன்று, அவர்கள் கேட்ட மறையுரையின் விளைவாக, வழிபாடு முடிந்ததும், எல்லாரும் கோவில் வளாகத்திலே, ஒரு மணி நேரமாவது தங்கி 'ரிலாக்ஸ்' செய்யலாம் என்று முடிவு செய்தனர். அதன்படியே, கோவிலை விட்டு வந்து வெளியில் நின்றனர். ஒருவர் ஒருவரை வாழ்த்தினர். பத்து நிமிடங்கள் இவ்வாறு கழிந்தன. பின்னர், மீதமுள்ள 50 நிமிடங்களை எப்படி கழிப்பது என்று, எவ்வாறு இளைப்பாறுவது என்று கேள்விகள், விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் கருத்து வேறுபாடுகளாய் அவர்கள் மத்தியில் இறுக்கத்தை உருவாக்கியது. அனைவரும் கடுகடுப்புடன் கோவில் வளாகத்தைவிட்டு கலைந்து சென்றனர். ஒன்று சேர்ந்து ஒருமணி நேரமாவது ‘ரிலாக்ஸ்’ பண்ணலாம் என்று அவர்கள் ஆரம்பித்த முயற்சி, 10 நிமிடங்களில் ஒவ்வொருவரையும் அதிகமான 'டென்ஷன்'ல் ஆழ்த்திவிட்டது...
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்குத் திட்டமிட்டார். கணவன், மனைவி, இரு பிள்ளைகள் என்று இருந்த அக்குடும்பத்தில் விடுமுறையை எங்கு, எப்படி செலவிடலாம் என்று திட்டங்கள் தீட்டப்பட்டன. 'ரிலாக்ஸ்' செய்வது எப்படி என்று அவர்கள் மத்தியில் ஆரம்பமான விவாதங்கள் விடுமுறையே வேண்டாம் என்று சொல்லுமளவு மாறியது...
நிம்மதியாய் இளைப்பாறுவது எப்படி என்பதையே நாம் மறந்துவிட்டோமோ என்று எண்ணும் அளவுக்கு நம்மிடையே ஆத்திரங்களும், அவசரங்களும், தேவைகளும், ஏக்கங்களும் கூடிவருகின்றன. ‘இளைப்பாறுதல்’ ‘நிம்மதி’ என்ற வார்த்தேகளே நம் அகராதியிலிருந்து நீங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

பல மாதங்களுக்கு முன் 'ஆண்டவர் என் ஆயன்' என்ற 23வது திருப்பாடலை, நாம் சிந்தித்தது நினைவிருக்கலாம். அத்திருப்பாடலில், பசி தீர உண்டு, தாகம் தீர பருகி, பரந்த புல்வெளியில் இளைப்பாறிய ஆடுகளைப்பற்றிச் சிந்தித்தோம். பசியும், தாகமும் அடங்கியதால் மட்டும் ஆடுகள் நிம்மதி அடையவில்லை; தங்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் காப்பாற்ற ஆயன் அருகிலேயே இருக்கிறார் என்ற எண்ணமும் ஆடுகளுக்கு நிம்மதியைத் தந்தது என்று சிந்தித்தோம்.
நிம்மதியாய் ஒரு மணி நேரம் இளைப்பாறுவது எப்படி என்று விவாதங்கள் புரிந்த பங்கு மக்களும், விடுமுறைக்குத் திட்டமிட்ட என் நண்பரின் குடும்பமும் ஒரு பக்கம்... திட்டங்கள் எதுவும் தீட்டாமல், எந்த விவாதமும் செய்யாமல், ஆயனின் கண்காணிப்பில் இளைப்பாறும் ஆடுகள் மறுபக்கம்...
இந்த ஆடுகளைப் பற்றிய ஆழ்ந்த அனுபவம் கொண்ட தாவீது எழுதிய திருப்பாடல் 131ஐ இன்று நாம் சிந்திக்க வந்திருக்கிறோம். வாழ்வில் நிம்மதி, நிறைவு பெறுவது எப்படி என்பதற்கு எளிமையான பாடங்களை இத்திருப்பாடலில் சொல்லித்தருகிறார் தாவீது.

திருப்பாடல் 131ல் கூறப்பட்டுள்ள எண்ணங்களை அலசுவதற்கு முன், அத்த்திருப்பாடலைப் பற்றிய ஓர் அம்சத்தை உணர்வது பயனளிக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று நாம் சொல்கிறோம். 'சிறியது அழகானது' (Small is beautiful) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். ஏழு வார்த்தைகளில் கடல் அளவு எண்ணங்களைப் புகுத்தி உலகிற்கு அழகான வாழ்வியல் தத்துவங்களைக் கூறியுள்ள திருக்குறளைப் புகழ்ந்து 'அணுவைத் துழைத்தேழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள்' என்று ஔவையார் கூறிச் சென்றுள்ளார். சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது ஒரு பெரும் கலை. இந்தக் கோணத்தில் இத்திருப்பாடலை நாம் அணுக வேண்டும்.

விவிலியத்திலேயே மிகக் குறுகியப் பிரிவு திருப்பாடல் 117 என்று சொல்லப்படுகிறது. இரண்டே இறைவார்த்தைத் தொடர்களைக் கொண்ட இத்திருப்பாடலுக்கு அடுத்தபடியாக, குறுகியப் பிரிவுகள்... 131, 133, 134 ஆகிய மூன்று திருப்பாடல்கள். இவை ஒவ்வொன்றிலும் மூன்று இறைவார்த்தைத் தொடர்கள் உள்ளன.
இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 131ன் மூன்று இறைவார்த்தைத் தொடர்களில் ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் தேடும் நிம்மதியைப்பற்றி, நிறைவைப்பற்றி ஆசிரியர் கூறியுள்ளார். நிம்மதி அடைய எத்தனையோ வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ஆசிரியர் கூறும் எளிய வழிகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

நிம்மதி அடைய முதலில் தேவையானது... பணிவு, தாழ்ச்சி. அரசராய்த் தெரிவு செய்யப்பட்ட தாவீது, தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தைப்பருவ வேர்களை மறக்காமல் இருந்ததால், இப்பாடலை உள்ளத்திலிருந்து வரும் உண்மையாக எடுத்துச் சொல்ல முடிந்தது. இப்பாடலின் முதல் இருவரிகள் இதோ: "ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை."
"என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை" என்று முதலிலும், "என் பார்வையில் செருக்கு இல்லை" என்பதை பின்னரும் ஆசிரியர் வரிசைப்படுத்தியுள்ளதில் ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். தாழ்ச்சி என்பது முதலில் அகத்தில் உருவாக வேண்டும், அதன் வெளிப்பாடாக, நமது முகத்திலும், அதாவது, கண்களிலும் தாழ்ச்சி தெரியும். அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்? ஒரு சிலர், அகத்தில் உண்மையான தாழ்ச்சி இல்லாமல், பார்வைக்குத் தாழ்ச்சியாய் இருப்பதுபோல் நடிப்பார்கள். உள்ளத்தின் உண்மைக் கண்ணாடியான கண்கள் இந்த நடிப்பை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும்.
உள்ளத்தில் இருக்கும் இறுமாப்பு, பார்வையில் செருக்காய் வெளிப்படும் என்று இத்திருப்பாடலில் ஆசிரியர் சொல்லாமல் சொல்வதை, நீதிமொழிகள் நூலில் சிந்தனையாளர் ஆகூர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். செருக்குள்ளவர்களைப் பற்றி ஆகூர் சொல்லும் வார்த்தைகள் கண்டன தீப்பொறிகளாய்த் தெறிக்கின்றன:
நீதிமொழிகள் 30 11-14
தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு. மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு. கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம்-இத்தகைய மக்களும் உண்டு. பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி - இவற்றை உடைய மக்களும் உண்டு: அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்: உலகிலுள்ள எளியோரைத் தின்று விடுவார்கள்.

தாழ்ச்சி ஒரு புதிரான பண்பு. 'நான் தாழ்ச்சியுடையவன்' என்று ஒருவர் உணர ஆரம்பித்ததும், தாழ்ச்சி மறைந்துவிடுகிறது. எப்போது 'நான்' என்ற அகந்தை, தாழ்ச்சியுடன் இணைகிறதோ அப்போது, தாழ்ச்சி மறைந்து, அகந்தை தலைதூக்க ஆரம்பிக்கும். Adrian Dieleman என்ற மறையுரையாளர் இதை அழகாக உருவகப்படுத்தியுள்ளார். " Pride is a telescope turned the wrong way. It magnifies self and makes the heavens small." எந்த ஒரு தொலைநோக்குக் கருவியிலும் கண்களை வைத்துப் பார்க்கும் பகுதி குறுகியும், விண்வெளியை நோக்கியுள்ள பகுதி விரிந்தும் இருக்கும். அகந்தை நமக்குள் உருவாக்கும் கண்ணோட்டம் ஒரு தொலைநோக்குக் கருவியைத் திருப்பிவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாகும். தொலைநோக்குக் கருவியைத் திருப்பிவைத்துப் பார்த்தால், 'நான்' என்ற உருவம் பெரிதாகவும், நாம் பார்க்க விழையும் விண்வெளி மிகச் சிறிதாகவும் மாறிவிடும். விண்வெளி சிறிதாக மாறுவதற்கு மற்றொரு காரணம், அகந்தை கொண்ட உள்ளத்திலிருந்து விண்ணகம், இறையரசு தூரமாய்ச் சென்றுவிடும். எனவேதான், இயேசு, மலைப்பொழிவில் எளிய மனத்தோர் விண்ணரசின் அருகில் உள்ளவர்கள் என்று கூறினார். ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்தேயு 5: 3)
பரிசேயர் ஒருவரும் வரிதண்டுவோர் ஒருவரும் கோவிலில் எவ்விதம் செபித்தனர் என்ற உவமையைக் கூறிய இயேசு, வரிதண்டுவோரே இறைவனின் கண்களில் உயர்ந்தவராய் இருந்தார் என்பதைக் கூறியுள்ளார்: இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்என்றார். (லூக்கா 18: 14)

தாழ்ச்சி, பணிவு என்றதும், கூனி, குறுகி, தரையோடு தரையாகக் கிடந்து, பாதங்களைத் துடைக்கும் மிதியடியாகக் கிடப்பது என்று ஒரு சிலர் எண்ணிப் பார்க்கலாம்.
உண்மையான தாழ்ச்சிக்கு எதிராக, போலியான தாழ்ச்சியையும் நாம் உலகில் அடிக்கடி காண முடியும்.
இவ்வகைத் தாழ்ச்சி பல நேரங்களில் ஆபத்தாக முடியும். ஒரு சிலர் தாங்களே இவ்வுலகில் தலைசிறந்த தாழ்ச்சியுடைவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வேடிக்கையையும் நாம் காணமுடியும். வேறு சிலர், தங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமெனில், மற்றவர்களின் பாதங்களில் மிதியடியாகவும் இருப்பதுபோல் நடந்துகொள்வார்கள். தலைவர்களின், தலைவிகளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குபவர்களைப் பார்த்து வெட்கப்படுகிறோம், வேதனைப் படுகிறோம். இவை எதுவுமே உண்மையானப் பணிவின், தாழ்ச்சியின் வெளிப்பாடுகள் அல்ல.
Humility is not thinking less of yourself, it's thinking of yourself less. - Rick Warren
"உன்னைப் பற்றி நீயே குறைவாக எண்ணுவது தாழ்ச்சி அல்ல, உன்னைப் பற்றி நீ குறைவான நேரங்கள் எண்ணிப்பார்ப்பதே தாழ்ச்சி" என்று Rick Warren என்பவர் கூறினார்.
உண்மையானத் தாழ்ச்சி என்பது, ஒருவர் தன்னைப்பற்றி கொண்டிருக்கும் சரியானத் தெளிவிலிருந்து உருவாகும் மதிப்பு. ஆம், அன்புள்ளங்களே, தன்னைப்பற்றிய சரியான மதிப்பு கொண்டிருப்பவர்களே உண்மையில் பணிவுடன் இருக்க முடியும். இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இப்பாடலின் அடுத்த வரியில் அழகாகக் சொல்கிறார். "எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை."
ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை உணர்ந்து செயல்பட்டால், எத்தனையோ வம்புகள், வழக்குகள் எழாது. இதனால், ஒருவரும் தங்கள் எல்லைகளைக் கடந்து சிந்திக்கக்கூடாது, கனவு காணக்கூடாது என்பது அல்ல. கனவுகள் காண வேண்டும், நமது எல்லைகளை விரிவாக்கும் முயற்சிகள், மேலான எண்ணங்கள் நமக்குத் தேவை. ஆனால், இவை நம்மை வெறும் கனவுலகில் வாழவைத்து, நமது அகந்தையை வளர்க்கும் வழியாக மாறிவிடக் கூடாது. திருப்பாடல் 131ல் நம் தேடலை அடுத்த வாரமும் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.