2012-07-17 16:37:04

போலந்து கத்தோலிக்கத் தலைவர்களும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தலைவரும் இவ்விரு நாடுகளுக்கிடையே ஒப்புரவை ஏற்படுத்த முயற்சி


ஜூலை 17,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill வருகிற ஆகஸ்டில் போலந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே ஒப்புரவை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என போலந்து கத்தோலிக்கத் தலைவர்கள் கூறினர்.
இரஷ்யாவும் போலந்தும் தங்களது கடந்தகாலப் பகையுணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளி ஒருவர் ஒருவரின் தவறுகளை மன்னிக்குமாறு அழைப்புவிடுக்கும் பொது அறிக்கையில் அச்சமயத்தில் முதுபெரும் தலைவர் Kirillம், போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jozef Michalikம் கையெழுத்திடுவார்கள் என்று இத்திங்களன்று போலந்து கத்தோலிக்கத் திருஅவை கூறியது.
1940ம் ஆண்டில் இரஷ்யாவின் Katynல் ஸ்டாலினின் அனுமதியின் பேரில் ஆயிரக்கணக்கான போலந்து இராணுவ அதிகாரிகளும் குடிமக்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் உயிர்ப்பு என்ற பெயரில் ஆலயத்தை எழுப்பி அதனை இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்தினார் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill.
அச்சயம் அவர் உரையாற்றிய போது, இந்தப் படுகொலைகள் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும், இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே ஒப்புரவு இடம்பெறுமாறும் அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.