2012-07-17 16:23:00

2013ம் ஆண்டின் உலக அமைதி நாள் கருப்பொருள் : “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்”


ஜூலை 17,2012. சமய சுதந்திரத்துக்கும் மற்றும்பிற அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், உலகளாவிய நிதி நெருக்கடி, அரசியலிலும் கல்வியிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஆகியவை, உலகில் மக்களாட்சி நெருக்கடியில் இருப்பதன் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீடம் அறிவித்தது.
2013ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று சிறப்பிக்கப்படும் 46வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருளை நிருபர் கூட்டத்தில் இத்திங்களன்று வெளியிட்ட திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இவ்வாறு கூறியது.
“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்” என்ற இந்தக் கருப்பொருள் குறித்த சிந்தனைகளை வழங்கிய அவ்வவை, இன்றைய உலகில் பல நாடுகளைப் பாதித்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில், அறநெறி குறித்த சிந்தனைகளைத் திருத்தந்தை தனது செய்தியில் உலக சமுதாயத்துக்கு வழங்குவார் என்றும் தெரிவித்தது.
அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் வெளியிட்ட “அவனியில் அமைதி” (Pacem in Terris) என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டை குறிக்கும் விதமாக, 46வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிடவிருக்கும் செய்தி அமையும் என்றும் அவ்வவை கூறியது.
46வது உலக அமைதி நாளுக்கானத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செய்தி வருகிற டிசம்பரில் வெளியாகும்.







All the contents on this site are copyrighted ©.