2012-07-16 15:29:38

வாரம் ஓர் அலசல் - உலகை மாற்ற உன் கரம் தேவை


ஜூலை 16,2012. ஒரு சமயம் ஜப்பானின் ஒரு படைப்பிரிவினர் போரிடுவதற்காக அந்நாட்டின் ஒரு பகுதியில் தங்கியிருந்தபொழுது Gasan Jōseki (1275–23நவ.1366) என்ற ஜப்பானிய ஜென் குரு வாழ்ந்த புத்தர் கோவிலில் தங்களுடைய தலைமையகத்தை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அந்த ஜென் குரு Gasan தன்னுடைய சமையல்காரரிடம், “நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ, அதே உணவைத்தான் படை அதிகாரிகளுக்கும் பரிமாற வேண்டும்” என்று கட்டளையிட்டார். இது அந்த அதிகாரிகளுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட வேண்டுமென்று விரும்பினார்கள். அதுதான் அக்காலத்தில் நடைமுறை வழக்கமாகவும் இருந்தது. அவர்களில் ஓர் அதிகாரி ஜென் குருவிடம் சென்று, “நீ எங்களையெல்லாம் என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நாங்களெல்லாம் நம்முடைய நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஏன் நீங்களெல்லாம் எங்களை நல்லவிதமாகக் கவனிக்கக் கூடாது?” என்று கோபமாகக் கேட்டார். அதற்கு அந்தக் குரு, “நீங்களெல்லாம் எங்களை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாங்களெல்லாம் மனித குலத்தை நல்லவிதமாகக் காப்பாற்றப் பாடுபடும் மனிதகுலப் போர்வீரர்கள். புரிந்து கொள்ளுங்கள்” என்று தீர்க்கமாகப் பதில் சொன்னார். அன்பு நேயர்களே, படைவீரர்கள் எந்த அளவுக்கு குடிமக்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றப் பாடுபடுகிறார்களோ, அந்த அளவுக்கு அன்பும் கருணையும் கொண்டு நல்ல சிந்தனையோடு குடிமக்கள் வாழ்வதற்கு Gasan போன்ற குருக்களும் சீடர்களும் எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். எனவே ஒரு சமுதாயத்தை சிறப்புற அமைப்பதற்கு அங்கு வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அதனைச் சிறப்புற அமைப்பதற்கு ஒவ்வொருவராலும் முடியும். ஒரு சமுதாயத்தை மாற்றுவதற்கும், அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொருவருக்கும் சக்தியும் உள்ளது.
உலக அளவிலும், தனிப்பட்ட நாடுகளிலும் அரசியலிலும் ஆன்மீகத்திலும் பொதுநல வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் தனிமனிதர்கள் பலர் வரலாற்றில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஜூலை15 இஞ்ஞாயிறன்று கர்மவீரர் காமராஜரின் 109வது பிறந்த நாளைச் சிறப்பித்தோம். புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த இவரை, ஏழைப்பங்காளன், தென்னாட்டுக் காந்தி, பெருந்தலைவர் என்றெல்லாம் பட்டங்களைச் சூட்டி போற்றி வருகின்றோம். தமிழகத்தில் கல்விக்கண் திறந்த படிக்காத மேதை காமராஜர், இந்திய மண்ணில் ஏற்படுத்திய தாக்கங்கள்தான், அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்கள் மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறார்.
ஜூலை18 இப்புதன் தென்னாப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கு 94வது பிறந்த நாள். கறுப்பு காந்தி என அழைக்கப்படும் மன்டேலாவின் பிறந்த நாளை “அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாகக்” கொண்டாடுவதற்கு 2009ம் ஆண்டு நவம்பரில் ஐ.நா. பொது அவை அங்கீகாரம் அளித்தது. அதன் பின்னர் ஐ.நா. மண்டேலா தினம் (UN Mandela Day) 2010ம் ஆண்டு ஜூலை18ம் தேதியன்று முதன் முறையாகச் சிறப்பிக்கப்பட்டது. தென்னாப்ரிக்காவில் கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காகப் போராடி அதில் வெற்றியும் கண்ட அந்நாட்டின் முன்னாள் அரசுத்தலைவரான நெல்சன் மன்டேலாவின் உயரிய விழுமியங்களை உலகில் தொடர்ந்து உயிர்பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நாளை அறிவித்தது ஐ.நா. நிறுவனம். இந்த நாளுக்கென உலக சமுதாயத்துக்கு நன்றி தெரிவித்த மண்டேலா, “சுதந்திரம் மற்றும் நீதிக்காக நான் போராடினேன், நல்லதோர் உலகை உருவாக்குவது தற்போது உங்கள் அனைவரின் கரங்களில் இருக்கின்றது” என்று கூறினார்.
RealAudioMP3 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி தென்னாப்ரிக்காவின் Mvezo என்ற கிராமத்தில் பிறந்தவர் Rolihlahla Mandela. பள்ளியில் ஆசிரியருக்கு இவரது பெயரை உச்சரிக்க கடினமாக இருந்ததால், இவருக்கு நெல்சன் என்று பெயர் சூட்டினார் ஆசிரியர். வழக்கறிஞருக்குப் படித்த நெல்சன் மண்டேலா, 1942ம் ஆண்டில் ANC என்ற ஆப்ரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதற்கு இரு ஆண்டுகள் கழித்து அவரும் 60 இளைஞர்களும் சேர்ந்து அக்கட்சியில் இளையோர் அமைப்பை ஏற்படுத்தினர். Apartheid என்ற நிறவெறிக் கொள்கையுடன் தென்னாப்ரிக்காவில் 1948ம் ஆண்டில் வெள்ளை இன அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த அநீதியான நிறவெறிச் சட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கியது ANC கட்சி. 1956ம் ஆண்டில் தேசத்துரோகம் என்ற குற்றச்சாட்டில் மண்டேலாவுடன் 155 பேர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். கறுப்பின மக்கள், இயக்கங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து Sharpevilleல் மக்கள் போராடிய போது 1960ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி கறுப்பினப் பெண்கள், சிறார்கள் என 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பும் என்ற பயத்தில், அந்நாட்டில் அவசரகாலச் சட்டத்தை அறிவித்து, ANC கட்சியையும் தடை செய்தது வெள்ளை இன அரசு. இதற்குப் பின்னர் அரசின் நிறவெறிச் சட்டங்களை எதிர்ப்பதற்கு ANC கட்சியினர், “நாட்டின் கேடயம்” என்ற (Umkhonto we Sizwe) மறைந்து வாழும் இராணுவப் பிரிவை உருவாக்கினர். இப்பிரிவின் தலைவராக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஓராண்டு மறைந்து வாழ்ந்தார். ஆனால் இவர் நாட்டைவிட்டு சட்டத்துக்குப் புறம்பே வெளியேறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு 1962ம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எட்டுமாத விசாரணைக்குப் பின்னர் 1964ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மண்டேலாவுக்கும் அவரது ANC கட்சியின் இன்னும் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு Robben தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 1982ம் ஆண்டு மார்ச் மாதத்தில் Pollsmoor சிறைக்கு மாற்றப்பட்டனர். தென்னாப்ரிக்காவில் apartheid என்ற நிறவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டு, ANC கட்சி மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து 27 வருட சிறைவாழ்வுக்குப் பின்னர், 1990ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி விடுதலை செய்யப்பட்டார் மண்டேலா.
இந்தச் சிறை அனுபவம் குறித்துப் பேட்டியளித்த மண்டேலா, “ RealAudioMP3 நாங்கள் கைதிகளாக இருந்தாலும், மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று சிறையிலும் மனித மாண்புக்காகப் போராடினோம். அமைதி, ஒப்புரவு, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், சமவாய்ப்பு ஆகியவைகளுக்கான போராட்டத்தில் நீண்ட காலம் பயணம் செய்துள்ளோம். இனிமேல் அவற்றைத் தொடர்ந்து நடத்த வேண்டியது மனித சமுதாயத்தின் ஒவ்வொரு தனிமனிதரின் கையில் இருக்கின்றது” என்று சொல்லியருக்கிறார். எனவே மனித உரிமைகளும் மனித மாண்பும் காக்கப்படுவதற்குத் துணிச்சலுடன் போராடிய மண்டேலாவின் பிறந்த நாளை அனைத்துலக நாளாக அறிவித்த ஐ.நா.நிறுவனமும், பிற தன்னார்வ அமைப்புகளும் ஒரு வேண்டுகோளையும் உலக சமுதாயத்துக்கு முன்வைத்தன. "நெல்சன் மண்டேலா 67 வருடங்கள் சமூக நீதிக்காகப் போராடினார். எனவே ஒரு நல்ல செயலுக்காக 67 நிமிடங்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒதுக்குமாறு உங்களிடம் கேட்கிறோம். உலகில் வறுமை ஒழிக்கப்படவும், அமைதியும் ஒப்புரவும் ஊக்குவிக்கப்படவும் உலக மக்கள் தங்களை அர்ப்பணிப்பதற்கு இந்த உலக நாள் உதவினால் நாங்கள் பெருமைப்படுவோம். சமூகநீதி ஆர்வலர் மன்டேலா போன்று இந்த உலகை மாற்றுவதற்கு மக்கள் உதவ வேண்டும். இந்த நாளில் நீங்கள் நோயாளிகளைச் சந்திக்கலாம், வீடுகளின்றி இருப்பவர்க்கு உணவு கொடுக்கலாம், இவை போன்ற பிறரன்புச் செயல்களைச் செய்யலாம்" என்றெல்லாம் பரிந்துரைக்கின்றன. மண்டேலா சிறையில் இருந்த போது அவரது கைதி எண் 46664. எனவே இந்த எண்ணின் பெயரில் HIV/AIDS நோய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையையும் மண்டேலா அமைப்பு செய்து வருகிறது. மொத்தத்தில் இந்த அனைத்துலக நெல்சன் மண்டேலா நாளில் ஒரு முக்கியமான கருத்தை மையமாக வைத்துச் சிறப்பிக்குமாறு உலகினர் ஒவ்வொருவரையும் ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரிடமும் உலகை மாற்றுவதற்குச் சக்தி இருக்கின்றது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரிடமும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்குத் திறமை இருக்கின்றது.
உலகில் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதற்குத் தனிமனிதர்களிடம் திறமைகளும் சக்தியும் இருக்கின்றன என்பதற்குக் கடந்த வாரத்தில் வெளியான சில தகவல்களே சான்றாகும். தமிழகத்தின் இராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரியைச் சேர்ந்த 73 வயதாகும் கருப்பையா என்பவர், சாலையோரம், பள்ளி, நியாயவிலைக்கடை, குடிநீர்த் தொட்டியின் சுற்றுப்பகுதி, அரசு அலுவலகக் காலி இடங்கள் எனப் பல இடங்களில் தனது சொந்தச் செலவிலே மரக்கன்றுகளை நட்டு வருகிறார். தனிமனிதராக இருந்து இப்படிச் சாதிக்கும் கருப்பையா அவர்கள், ஒரு காலத்தில் மரவெட்டித் தொழிலாளியாகத் தனது மகனை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார். "ஒரு மரத்தில் எறும்பு முதல் பறவைகள் வரை வாழ்கின்றன. மரங்கள் எல்லா உயிர்களுக்கும் நிழல், மழை தருகின்றன என்பதை உணர்ந்த நான், 2003ம் ஆண்டுமுதல் மரக்கன்றுகளை நடத் துவங்கினேன் என்று இவர் கூறியிருக்கிறார்.
அதேபோல், 56 வயதாகும் திருமதி புனிதவள்ளி, சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டு, பெண்களுக்காக 130 புத்தகங்களுக்கும் மேல் எழுதியிருக்கும் எழுத்தாளர். ''நம் வாழ்க்கையை விதி தீர்மானிக்கலாம். ஆனால், நமது மகிழ்ச்சியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்பாராத விபத்தால் சக்கர நாற்காலியில் நான் அமர நேர்ந்தபோது துவளவில்லை. இதில் அமர்ந்தபடிதான் இனி வரப்போகும் பல வெற்றிகளைச் சந்திக்கப் போகிறோம்!’ என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டேன் என்று சொல்லியிருக்கிறார். உலகத்தில் எதையும் வெல்லலாம் என்ற உற்சாகத்தை இவர் மற்றவர்களுக்கு அளித்து வருகிறார். ஒரு கவிஞரும், “சாதாரண மக்கள் அசாதரணக் காரியங்களைச் செய்ய முடியும் என நான் நம்புகிறேன். வெறுப்பைவிட பரிவன்பு வலிமையானது. அறியாமையைவிட அறிவு உறுதியானது. பயத்தைவிட புரிதல் வலிமையானது என நான் நம்புகிறேன்” என்று தனது நம்பிக்கையைப் பட்டியலிட்டுள்ளார். அன்பர்களே, கடவுளருளால் நாம் ஒவ்வொருவரும் நிறையக் கொடைகளாலும் திறமைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறோம். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதும் வீணாக்குவதும் நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கின்றது. நாம் வாழும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு நம் ஒவ்வொருவரது கரமும் தேவைப்படுகின்றது. நம்மால் நிச்சயமாக முடியும் நாம் மனது வைத்தால்







All the contents on this site are copyrighted ©.