2012-07-16 14:58:29

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


ஜூலை,16,2012. திருஅவையின் வழியாக கிறிஸ்து ஆற்றிவரும் செயல்கள் எப்போதும் முன்னேறிச் செல்லுமே தவிர, பின்னோக்கிச் செல்லாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறன்று Frascati பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தியபின், திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்ஃபோ வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தான் மூவேளை செப உரைக்குத் தாமதமாக வந்ததால் மக்களைக் காக்க வைத்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் திருத்தந்தை தன் மூவேளை செப உரையை வழங்கினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிகழ்ந்ததன் 50 ம் ஆண்டைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், இந்தப் பொதுச் சங்கத்தின் ஏடுகளில் பொதிந்திருக்கும் எண்ணங்களை மக்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை படித்து, திருஅவை பற்றிய தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தன் செப உரையின் இறுதியில், விடுமுறை நாட்களை மக்கள் நல்ல முறையில் செலவிட அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, விடுமுறை நாட்களில் நாம் மகிழ்வாக இருக்கும் வேளையில், தனிமையிலும், நோயாலும் மகிழ்வின்றித் தவிப்போருக்கும் மகிழ்வைக் கொணர முயலவேண்டும் என்று கூடியிருந்த அனைவரையும் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.