2012-07-16 15:04:34

கருத்தடைச்சாதனங்கள் எயிட்ஸ் நோய்க்கான தீர்வாக முடியாது. - தென்னாப்ரிக்க ஆயர்


ஜீலை 17.07.2012. எயிட்ஸ் நோய் பரவலைத் தடுப்பதற்கானத் தீர்வாகக் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு இருக்கமுடியாது என மீண்டுமொருமுறை தென்னாப்ரிக்க மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
ஏறத்தாழ 22 விழுக்காட்டு HIV நோய் பாதிப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் தென்னாப்ரிக்காவில் சர்வதேச சமுதாயம் கடுமையானத் தீர்வுகளைப் புகுத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய Eshowe ஆயர் Xolelo Thaddaeus Kumalo, ஆப்ரிக்க மக்களுக்கு எது தேவை என்பதை சர்வதேச சமுதாயம் ஆப்ரிக்க மக்களுடன் எவ்வித ஆலோசனையுமின்றியே முடிவு செய்கிறது என்றார்.
கருத்தடைச்சாதனப் பயன்பாட்டின் மூலம் எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்கமுடியும் என பள்ளிகளில் அரசால் கற்பிக்கப்படுவதால், கருத்தடைச்சாதனப் பயன்பாடு அதிகரித்து, நோய் பரவலுக்கும் காரணமாக அமைகின்றது என்ற கவலையை வெளியிட்டார் ஆயர் Kumalo.
தென்னாப்ரிக்காவின் இன்றைய உண்மையான தேவைகள் பற்றியும் குறிப்பிட்ட ஆயர், இன்றையத் திருஅவையின் மிக முக்கியத் தேவை, நற்செய்தி அறிவித்தலே, ஏனெனில் இயேசுவுடன் மக்கள் இணைந்திருந்தால் இலஞ்சம், ஊழல், வன்முறை என்பவையெல்லாம் தானாகவே மறைந்துவிடும் என மேலும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.