2012-07-14 15:01:03

கவிதைக் கனவுகளுடன் இணைந்து வரும் ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 பத்து ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஒரு கல்லூரி மாணவரைப்பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். அந்த இளைஞர் பெயர் இரவி. பெற்றோர் யாரென்று தெரியாமல், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை நல்ல முறையில் முடித்துவிட்டு, கல்லூரியில் காலடி வைத்திருந்தார். பட்டப்படிப்புக்குப் பின், ஐ.ஏ.எஸ். படிக்கவேண்டுமென்ற உறுதியுடன் படித்துக் கொண்டிருந்தார். படிப்பு நேரம் போக, மற்ற நேரங்களில் சமுதாயப் பணிகளும் செய்து வந்தார்.
ஒருநாள், தலையிலும், கையிலும் கட்டுகளுடன், இரத்தக்காயங்களுடன் வந்துகொண்டிருந்த இரவியை நான் கல்லூரி வாசலில் சந்தித்தேன். காரணம் கேட்டேன். அதற்கு அவர், "Father, நான் பஸ்ல காலேஜுக்கு வரும்போது, ஐந்து இளைஞர்கள் பஸ்ல சொல்லத்தகாத வார்த்தைகள் பயன்படுத்தி பெண்களைக் கேலி செஞ்சாங்க. அவங்க செய்றது சரியில்லன்னு நான் சொன்னேன். அதனால, கைகலப்பு வந்துச்சு. அவங்க அஞ்சு பேர், நான் தனி ஆள். அடிபட்டுடிச்சி." என்றார். நான் அவரிடம், "இரவி, உனக்கு ஏன் இந்த வம்பு?" என்ற வழக்கமான பல்லவியுடன் பேச ஆரம்பித்தேன். அவரோ, "Father, தப்புன்னு தெரிஞ்சா, அதைத் தட்டிக்கேக்கணும். தட்டிக்கேக்க ஆள் இல்லன்னு தெரிஞ்சா தப்பு கூடிகிட்டே போகும்" என்றார். தனி ஆளாய் இருக்கும்போது தட்டிக்கேட்பதில் உள்ள ஆபத்துக்களை அவருக்குப் புரியவைக்க முயன்றேன். அப்போது இரவி சொன்னது, இன்னும் என் உள்ளத்தில் பதிந்துள்ளது. "Father, எனக்குன்னு சொந்தம் எதுவும் இல்ல. நான் எப்போதுமே தனி ஆள். தனி ஆளா இருக்குறது ஆபத்துன்னு நீங்க சொல்றீங்க. தனி ஆளா இருக்குறதுல ஒரு தனி சுதந்திரம், பலம் இருக்குறதா நான் பாக்குறேன். என்னை அவுங்க அடிச்சுக் கொன்னாலும் ஏன்னு கேக்க யாரும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனால், அப்படியே சாவுறதா இருந்தாலும் நல்லது செஞ்சுட்டு சாவுறோம்கிற திருப்தி எனக்குப் போதும்" என்று இரவி சொன்னார்.
இரவியைப்பற்றி இன்று நான் எண்ணிப்பார்க்கக் காரணம் உள்ளது. இறைவாக்கினராய் வாழ்வது சவால்கள் நிறைந்த வாழ்க்கை என்று சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். இறைவாக்கினர்கள் தனி ஆட்களாய், தனிப்பாதையை வகுத்துக்கொண்டு, கூட்டமாய் ஒரு பாதையில் சென்ற உலகத்திற்கு எதிர் சாட்சிகளாய் வாழ்ந்தனர் என்பது நமக்குத் தெரியும். 'நமக்கேன் வம்பு?' என்ற மனநிலையுடன், என்னைப் போன்ற ஆயிரம் பேர் ஒரு வழியில் செல்லும்போது, தனி ஆளாய் இருந்தாலும், தப்பைத் தட்டிக்கேட்கத் துணிந்த இரவி போன்றோர் இன்றைய உலகில் நம்முடன் வாழும் இறைவாக்கினர்களின் வாரிசுகள்.

இறைவாக்கினர்களையும், இறைவாக்கை ஏந்திச்செல்லும் இறைப்பணியாளர்களையும் பற்றி சிந்திக்க இன்று மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இறைவாக்கினர் ஆமோசை இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கிறோம். இறைவனின் பணியாளராய் வாழ்வதைப்பற்றி இயேசு தன் சீடர்களுக்குத் தந்த அறிவுரைகள் இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளன.
இறைவாக்கினர்கள், இறைப்பணியாளர்கள் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இது குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஒதுக்கப்பட்டத் தொழில் என்று நாம் ஒதுங்கிவிடக் கூடாது. இன்றைய வாசகங்களில் நாம் சந்திக்கும் அத்தனை பெரும் குருக்களாக, துறவிகளாக பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அனைவருமே, எளியத் தொழிலாளிகள். நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு என்று அனுப்பினார். (ஆமோஸ் 7: 14-15) என்று இறைவாக்கினர் ஆமோஸ் தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பது நாம் அறிந்த விவரம். எனவே, நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள்தாம். இன்றைய வாசகங்கள் நம் அனைவருக்குமே தேவையானப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் அத்தனை இறைவாக்கினர்களும் தீப்பிழம்புகள். இவர்களில் ஆமோஸ் மிக உக்கிரமாக எரிந்த ஒரு தீப்பிழம்பு. இறைவாக்கினர் ஆமோஸ் நூலில் நாம் கேட்பதெல்லாம் ஆமோஸ் வழியாக, இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் விடுத்த எச்சரிக்கைகள்.
ஆமோஸ் கூறிய கசப்பான உண்மைகளைக் கேட்கமுடியாத தலைமைகுரு அமட்சியா, பெத்தேல் பகுதியைவிட்டு ஆமோசை ஓடிப்போகச் சொல்கிறார். அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே, வேண்டுமெனில் "யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக் கொள்" என்று அமட்சியா அறிவுரைத் தருகிறார்.
அமட்சியா சொல்வதை ஆழ்ந்து சிந்தித்தால், அதில் புதைந்திருக்கும் உண்மைகளை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: "ஆமோஸ், பெத்தேலில் நாங்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசனுக்கும், மக்களுக்கும் நீ கூறும் எச்சரிக்கைகள் எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிடும். எனவே, எங்கள் பிழைப்பைக் கெடுக்காமல் நீ யூதேயாவுக்குப் போய், அங்கே இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்." என்பதே அமட்சியாவின் அறிவுரை. ஓர் இறைவாக்கினர் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதை அமட்சியாவின் வார்த்தைகளில் நாம் கற்றுக்கொள்ளலாம்.
அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆமோஸ் என்ற தீப்பிழம்பு இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிகிறது. "இறைவாக்கு உரைப்பது ஒரு பிழைப்புக்கென்றால், நான் இறைவாக்கினன் அல்ல. அரசனுக்குத் துதிபாடும் இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல" என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆமோஸ். "நான் பிழைப்பு தேடிக்கொள்ள வேண்டுமெனில் ஆடு, மாடு மேய்த்து வாழ முடியும்" என்று சுட்டிக்காட்டுகிறார் ஆமோஸ்.
பிழைப்புக்காக இறைவாக்கு உரைப்பது, மந்திரம் சொல்வது, பலிகள் ஆற்றுவது, போதிப்பது என்று வாழ்ந்த குருக்கள், மதத்தலைவர்கள், போலி இறைவாக்கினர்கள் மத்தியில் ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு, வாழ்வைத் தேடுவது வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்வுப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கு அனுப்பி வைக்கும் இன்றைய நற்செய்திப் பகுதியும் ஒரு சில முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது.
இயேசு தன் சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார் என்பதில் நமது முதல் பாடம் ஆரம்பமாகிறது. இதைக் கண்டதும், மெத்தப்படித்த அறிவாளியான என் எண்ணங்கள் வேறு திசையில் ஓடின. இருவர் இருவராக அனுப்பியதற்குப் பதில், ஒவ்வொருவராக, தனித்தனியாக அனுப்பியிருந்தால், இன்னும் பல இடங்களுக்குச் சீடர்கள் சென்று இறையரசைப்பற்றி சொல்லியிருக்கலாமே, இயேசுவுக்கு மேலாண்மைப் (management) பாடங்கள் சரிவரத் தெரியவில்லையே என்று அவசரமாக முடிவெடுத்தேன்.
தனித்துச் சாதிப்பதே தலைசிறந்தது என்று மேலாண்மைப் பாடங்களும், வர்த்தக உலகமும் அடிக்கடி சொல்லிவருவதைக் கேட்டு பழகிப்போனதால் வந்த விளைவு இது. மேலாண்மைப் பாடங்களில், இருவராக, குழுவாகச் செயல்படும் வித்தைகள் சொல்லித் தரப்பட்டாலும், இறுதியில் தனி ஒருவரின் சாதனைகளே பெரிதுபடுத்தப்படுகின்றது. தனிமனிதத் துதியே முதலாளித்துவத்தின் (Capitalist) அடிப்படை. தனி ஒருவர் சாதனைகளை அடைவதற்கு, போட்டிகள், குறுக்கு வழிகள், அடுத்தவரைப் பயன்படுத்துதல் என்ற பல பாதகமான பாடங்களும் சொல்லித் தரப்படுகின்றன.
இறைவனின் பணி இதற்கு நேர்மாறானது. பல சமயப் பாரம்பரியங்களில் அருள் பணிகளுக்குச் செல்பவர்கள் இருவர் இருவராய்ச் சென்றனர் என்பதைப் படித்திருக்கிறோம். இருவராய்ச் செல்லும்போது, ஒருவர் மற்றொருவருக்கு உதவியாக இருக்க முடியும்; பல வேளைகளில் ஒருவர் மற்றொருவரின் மனசாட்சியாகச் செயல்படவும் முடியும். இவ்வாறு செயல்பட்ட கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.
அருள்பணி நேரங்களில் போதனைகள் நிகழும், குணமளிக்கும் அரும் செயல்கள் நிகழும். மக்களிடம் பேரும் புகழும் ஓங்கும். இந்த நேரங்களில் ஒருவர் தனியாகச் செயல்பட்டால், அந்தப் போதனைகளும், அற்புதச்செயல்களும் ஏதோ தன் சொந்த சக்தியால் நிகழ்ந்ததைப்போல உணரும் வாய்ப்புக்கள் அதிகம் எழும். இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர் தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவர முடியும். சுயநலத்தில் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ள நம் உலகிற்கு, இணைந்து செயல்படுவதாலேயே சாதிக்க முடியும் என்று இயேசு சொல்லித்தரும் இந்தப் பாடம் மிகவும் தேவை.

இரண்டாவது பாடம்... இவ்விதம் அனுப்பப்பட்டவர்களுக்கு இயேசு அதிகாரம் அளித்தார் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். எவ்வகை அதிகாரம்? இயேசுவின் சீடர்கள் மக்கள் மத்தியில் பணிபுரியச் செல்கின்றனர். அம்மக்கள் மீது அதிகாரம் செலுத்த இயேசு அவர்களை அனுப்பவில்லை. மாறாக, அம்மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த தீய சக்திகள் மீது அதிகாரம் அளித்தார். மக்களுக்காகப் பணிபுரிந்த இயேசு, அவர்களை அதிகாரம் செய்ய தன் பணியை பயன்படுத்தவில்லை, அவர்களைத் தீய சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அதே பாடத்தைத் தன் சீடர்களுக்கும் இயேசு சொல்லித் தந்தார்.
மக்கள் பணியில் ஈடுபடுகிறோம் என்று சொல்லி, மக்களின் நம்பிக்கையைப் பெறும் பலர், மக்களை அடக்கி, ஒடுக்கி நசுக்குவதற்குத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் தீயசக்திகளை அடக்கி, ஒடுக்கி நசுக்குவதற்கு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறியிருக்கும். அதிகாரம் என்ற பெயரில் மக்களை வதைக்கும் நம் தலைவர்கள் இயேசுவின் காலடிகளில் அமர்ந்து இந்த ஒரு பாடத்தையாவது பயில்வார்களா? நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்வோம்.

அருள்பணி, மக்கள் பணி என்ற ஆர்வத்தில் புறப்படும் எவரும் 'இதைச் செய்யவேண்டும்', 'அதைச் செய்யவேண்டும்' என்ற திட்டங்களுடன் மட்டும் கிளம்பினால், இதோ, இயேசு நற்செய்தி வழியாகத் தரும் மூன்றாவது பாடத்தைப் பயிலவேண்டும்.
பணியாளர் வார்த்தைகளால் மட்டும் போதிப்பது பயனளிக்காது, அவரது வாழ்க்கையாலும் போதிக்கவேண்டும் என்பதை இயேசு இந்த வரிகளில் சொல்லித்தருகிறார். பணியாளரின் வாழ்வு மிக எளிதான வாழ்வாக இருக்க வேண்டும் என்பதை, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் (மாற்கு 6: 8-9) என்ற இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. "Less luggage more comfort" அதாவது, "குறைவான சுமை, நிறைவான பயணம்" என்று இரயில் பெட்டிகளில் முன்பு எழுதப்பட்டிருந்த வரிகள் என் நினைவுக்கு இப்போது வருகின்றன. வாழ்க்கைப் பயணம் எளிமையாய் அமைந்தால், தேவையில்லாத சுமைகளை உள்ளத்தில் தாங்கி, பயணம் முழுவதும் பாடுபடவேண்டாம் என்று இயேசு சொல்வது எல்லாருக்கும் பொதுவான ஒரு நல்ல பாடம்.

"உங்களை வரவேற்பவருடன் தங்கி இருங்கள், வரவேற்க மறுப்பவர்களிடம் இருந்து விரைவில் விலகிச் செல்லுங்கள்" என்பது இயேசு நமக்குச் சொல்லித் தரும் நான்காவது பாடம். எளிமையான வாழ்வுமுறை, வரவேற்கும் அன்பு உறவுகளில் மகிழ்தல், என்பவைகளை வலியுறுத்தும் இயேசு, வரவேற்பு இல்லாத இடங்களிலிருந்து செல்லும்போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். என்று சொல்கிறார்.
கால் தூசியை உதறிவிடுவதை நாம் வழக்கமாக ஒரு கோபச்செயலாக, நம்மை வரவேற்காதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையாகவே சிந்தித்துள்ளோம். இம்முறை நான் இந்த வரிகளை வாசித்தபோது, வேறு ஓர் அர்த்தத்தைச் சிந்தித்தேன். பணிசெய்ய செல்லுமிடத்தில் சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்த கசப்பான எண்ணங்களைச் சுமந்துகொண்டு அடுத்த இடம் செல்லவேண்டாம். அந்த கசப்பை அங்கேயே விட்டுவிடுங்கள். காலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களை தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக நான் எண்ணிப்பார்க்கிறேன். வரவேற்பு இல்லையென்ற கசப்பான எண்ணங்களை நாம் சுமந்துகொண்டே சென்றால், அது காலில் படிந்த தூசியாக இல்லாமல், கண்களில் விழுந்த தூசியாக உறுத்திக்கொண்டே இருக்கும். எந்த ஒரு கசப்பான நினைவையும், எண்ணத்தையும் கால் தூசியாகக் களைவதும், கண் தூசியாக சுமந்து வருந்துவதும் நம்மைப் பொறுத்தது.
இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்களை இன்றைய வாசகங்கள் வழியே நமக்கு சொல்லித்தந்த இறைவனுக்கு நன்றி பகர்வோம்.








All the contents on this site are copyrighted ©.