2012-07-13 16:13:29

மலேசியாவில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டம் இரத்து


ஜூலை13,2012. மலேசியாவில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என்று நீண்ட காலமாகவே சமூக ஆர்வலர்கள் அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.
நாட்டில் புதிய குடியரசை உருவாக்கும் நடவடிக்கையில் இது முதல்படி என்று கூறி, இந்தச் சட்டத்தை இரத்து செய்வதாக பிரதமர் Najib Razak இப்புதனன்று அறிவித்தார்.
மலேசியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தனது ஆளுங்கட்சியில் சீரமைப்புகள் இடம்பெற்று வருகின்றன என்பதை வெளிக்காட்ட பிரதமர் Najib எடுத்திருக்கும் நடவடிக்கை இது என்றும் சொல்லப்படுகின்றது.
மலேசியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பிரதமர் Najib சார்ந்திருக்கும் கட்சியே அங்கு ஆட்சி செய்து வருகிறது.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, கொடுங்கோல் சட்டங்கள் என்று கருதப்பட்ட பலவற்றை பிரதமர் நஜீப் ஏற்கனவே இரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.